கொழும்பில் சிறுவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு - தொடரும் கைதுகள்
ஜிந்துப்பிட்டி பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் கடற்கரை வீதியின் 95 வத்தை பகுதியில் வைத்து நேற்று (22) கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
ஜிந்துப்பிட்டி பகுதியில் அண்மையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்த நிலையில், ஒருவர் கொலை செய்யப்பட்டதுடன், மேலும் இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவரிடம் இருந்து 24 கிராம் 300 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (23) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், கடற்கரை வீதி காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |