வீதியில் நிலைதடுமாறி திடீரென விழுந்த அமெரிக்க அரசுத் தலைவர்(காணொலி)
திடீரென நிலைதடுமாறி விழுந்தார்
வீதியில் சைக்கிள் ஓட்டிச் சென்ற அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் திடீரென நிலை தடுமாறி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெலவெயர் மாகாணத்தில் உள்ள அவரது கடற்கரை இல்லம் அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் தனது மனைவியுடன் தங்களின் 45வது திருமண ஆண்டு விழாவினை கொண்டாடும் வகையில் டெலவெயர் மாகாணத்தில் உள்ள தங்களது கடற்கரை இல்லத்திற்கு சென்றுள்ளார்.
மக்களுடன் பேச சைக்கிளை நிறுத்திய பைடன்
இந்த நிலையில், சனிக்கிழமை பகல், தமது கடற்கரை இல்லம் அருகே மனைவி உள்ளிட்டோருடன் ஜோ பைடன் சைக்கிளிங் சென்று கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த மக்களை பார்த்ததும் பேசுவதற்காக சைக்கிளை நிறுத்தியுள்ளார்.
அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். ஆனால் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் உடனடியாக எழுந்த ஜோ பைடன், தாம் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சைக்கிள் பெடலில் இருந்து தமது காலணியை விடுவிக்க முயன்ற நிலையிலேயே, தடுமாற்றம் ஏற்பட்டதாக ஜோ பைடன் பத்திரிகையாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.
சுமார் 10 நொடிகளுக்குள் தரையில் இருந்து எழுந்து, குவிந்திருந்த மக்களுக்கு கை அசைத்து வணக்கம் செலுத்தினார். குறித்த சம்பவத்தால் காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும், அரசுத் தலைவர் மருத்துவ உதவியை நாடவில்லை எனவும் வெள்ளைமாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

