அழைப்பை நிராகரித்தது வட கொரியா! பைடன் தரப்புக்கு பெரும் ஏமாற்றம்
வட கொரியாவை தொடர்பு கொள்ளும் அமெரிக்காவின் முயற்சிக்கு பியோங்யாங் இதுவரை பதிலளிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாத நடுப்பகுதியிலிருந்து இராஜதந்திர முறையில் வட கொரியாவை தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என ஜோ பைடன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். முயற்சி தகுந்த பலனைத் தராவிட்டாலும், வட கொரியாவை தொடர்பு கொள்ள முயன்றது குறித்து முதன்முறையாக வொஷிங்டன் தகவல் வெளியிட்டுள்ளது.
பியோயாங் உரிய பதில் வழங்கவில்லை என்பதால், வட கொரியாவின் அணுவாயுத மிரட்டல், ஏவுகணைத் திட்டங்கள் போன்றவற்றை ஜோ பைடன் நிர்வாகம் எவ்வாறு கையாளப் போகிறது என்பது குறித்த கவலை தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க இராஜாங்க அமைச்சர் அண்டனி பிலின்கென், தற்காப்பு அமைச்சர் லோய்ட் ஒஸ்டின் ஆகியோரின் தென்கிழக்காசியப் பயணம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இருவரும் ஜப்பானுடனும், தென் கொரியாவுடனும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இந்நிலையில் வட கொரியா, எதிர்காலத்தில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபடுமா என்பது சந்தேகமே என கூறப்படுகின்றது.