சர்ச்சையில் சிக்கிய ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ: வெளிவரப்போகும் சிசிரிவி காட்சிகள்
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் (Johnston Fernando) சொந்தமான குறித்த பி.எம்.டபிள்யூ. கார் நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு ஹில்டன் ஹோட்டலின் சிசிரிவி காட்சிகளை பாதுகாப்பாக வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்று (11) குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்து விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பான சிசிரிவி காட்சிகளை விசாரணைக்கு ஆதாரமாக முன்வைக்க தயாராக உள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
விசாரணைகளின் முன்னேற்றம்
அத்துடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவித்ததுடன், குறித்த வாகனத்தை நீதிமன்றக் காவலில் வைக்குமாறும் நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் இடம் குறைவாக உள்ளதால், வாகனத்தை குற்றப் புலனாய்வு திணைக்கள வளாகத்தில் தடுத்து வைக்குமாறு நீதவான் தெரிவித்துள்ளார்.
கைது நடவடிக்கை
இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது சாரதிகள் இருவர் மற்றும் வாகனத்தை ஒன்றிணைத்ததாக கூறப்படும் நபரின் உறவினர் ஒருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வாகனம் கொழும்பு ஹில்டன் ஹோட்டலின் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அதனைக் கைப்பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |