அரசாங்கத்தை விரட்டியடிக்க இன்று ஆர்ப்பாட்டத்தில் இணையுங்கள் - தமிழ் முற்போக்கு கூட்டணி
நாட்டில் உள்ள கொள்ளைக்கார அரசியல்வாதிகளை விரட்ட இன்று எங்களுடன் போரட்டத்தில் இணையுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாடளாவிய ரீதியல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தின் காரணமாக கடந்த 3ம் திகதி பிற்போடப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆர்ப்பாட்டம் , இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தலவாக்கலையில் இடம்பெறவுள்ளது.
நாட்டுமக்களின் ஆணைக்கும் கோஷத்திற்கும் எதிராக ஆட்சியை நடாத்துவதற்கு இவ்வரசாங்கம் திட்டமிட்டுகிறது.
தற்போதுள்ள அரசாங்கத்தில் காணப்படும் கொள்ளைக்காரர்கள் விரட்டப்பட வேண்டுமென்பதுடன் அவர்கள் கொள்ளையிட்ட பணம் மீளப்பெறப்பட்டு நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டுமென்றே மக்கள் ஒருமித்து வலியுறுத்து வருகின்றனர்.
ஆனால் அவ்வாறு மக்களால் நடாத்தப்பட்டு வரும் போராட்டங்கள் ஆபத்தான நிலைமையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றன. அவற்றை அரசாங்கம் தவறாக பயன்படுத்தி மக்களை அடக்குமுறையில் கொண்டு செல்வதற்குரிய நிலைமைகள் உண்டு.
ஆகவே ஒரு தலைமைத்துவத்துவத்திற்கு கீழ் ஒன்றிணையுமாறு நாம் மக்களை கேட்டுக்கொள்கிறோம். அந்த வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து தலவாக்கலையில் நடாத்தும் போராட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு நாம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
