காஸாவில் தலைவிரித்தாடும் பஞ்சம்: உணவுக்காக தனது புகைப்பட கருவியை விற்கும் பத்திரிகையாளர்
காஸாவில் உணவு மற்றும் சுகாதாரமான குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனிடையே சர்வதேச நிறுவனங்களுக்காக பணிபுரிந்த பத்திரிகையாளர் ஒருவர், உணவுக்காக தனது புகைப்பட கருவியையும், பாதுகாப்பு உபகரணங்களையும் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
காஸாவில் பணிபுரிந்துவரும் புகைப்பட பத்திரிகையாளர் முகம்மது அபு வோன் லிங்க்டு இன் சமூக வலைதளப் பக்கத்தில் உணவுக்காக தனது புகைப்படக் கருவியையும், பாதுகாப்பு உபகரணத்தையும் விற்பனைக்கு அறிவித்துள்ளார்.
பத்திரிகையாளரின் நெகிழ்ச்சியான பதிவு
அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் காஸாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர். நான் எனது உபகரணங்களையும் பாதுகாப்பு கவசத்தையும் வழங்க விரும்புகிறேன். அதன்மூலம் எனக்கும் எனது குடும்பத்துக்குமான உணவை என்னால் வாங்க முடியும் எனப் பதிவிட்டுள்ளார்.
நியூயோர்க் டைம்ஸ், ஸ்கை நியூஸ், ஏபிசி நீயூஸ் என சர்வதேச ஊடகங்கள் பலவற்றுக்கு பணியாற்றியுள்ள முகம்மது இவ்வாறு பதிவிட்டுள்ளது பலரால் பகிரப்பட்டு வருகிறது.
காஸாவில் கடும் பஞ்சம்
காஸாவில் கடும் பஞ்சம் நிலவுவதால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு பலர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை மற்றும் மனிதாபிமான அமைப்புகள் பல சுட்டிக்காட்டியுள்ளன.
உலக உணவுத் திட்ட அமைப்பு தரவுகளின்படி, காஸாவில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு அன்றாட உணவு கிடைப்பதில்லை எனத் தெரிகிறது. காஸாவில் கிட்டத்தட்ட 4,70,000 மக்கள் கடும் பஞ்சத்தில் சிக்கித்தவிப்பதாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
