சுயாதீன ஊடகவியலாளர்கள் இருவர் குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு
இரண்டாம் இணைப்பு
மருதங்கேணியில் காவல்துறையினருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் இடம்பெற்ற விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இரணைமடு பகுதியில் உள்ள பிராந்திய குற்ற விசாரணை பிரிவினரால் இன்று புதன்கிழமை குறித்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பிராந்திய குற்ற விசாரணை பிரிவினரின் அழைப்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் த.பிரதீபன் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் த.பரமசிவன் ஆகியோர் குறித்த வாக்குமூலத்தை இன்றையதினம் வழங்கியுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஜுன் 2ஆம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்துகொண்ட கூட்டத்தில் புலனாய்வுப் பிரிவினைச் சேந்தவர் சென்றிருந்த நிலையில் குழப்பமான நிலை ஏற்பட்டிருந்தது.
குறித்த காணொளிகள் மற்றும் செய்திகள் ஊடகங்களில் வெளியானமை தொடர்பாகவே குறித்த ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் த.பிரதீபன் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் த.பரமசிவன் ஆகியோர் கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் மருதங்கேணியில் காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ள வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
குறித்த சம்பவம் தொடர்பில் செய்தி பிரசுரித்தமை தொடர்பில் வாய் முறைப்பாடு பெற கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
