மனித புதைகுழிகள் தொடர்பில் முறைப்பாடளிக்குமாறு அரசாங்கம் வலியுறுத்து!
களுவாஞ்சிகுடி மற்றும் குருக்கள்மடம் மனித புதைகுழிகள் தொடர்பில் முறைப்பாடளிக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கேட்டுக் கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி மற்றும் குருக்கள்மடம் ஆகிய பகுதிகளில் மனித புதைகுழிகள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய அப்பகுதிகளை அண்மித்த பகுதிகளுக்கு அவர் கண்காணிப்பு விஜயத்தை இன்று (4) மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயத்தின் போது, மனிதப்புதைக்குழிகள் தொடர்பில் முறைப்பாடுகளை சமர்ப்பித்த குடியிருப்பாளர்களையும் அமைச்சர் சந்தித்துள்ளார்.
கடந்த கால சம்பவங்களுக்கு நீதி
அத்துடன், மனிதப் புதைகுழி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடத்தப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
அதன்போது, மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர், “ஐக்கிய நாடுகள் சபையையோ அல்லது சர்வதேச சமூகத்தையோ திருப்திப்படுத்துவதற்காக காணாமல் போனோர் தொடர்பிலும்,மனித புதைகுழிகள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை.
தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின் கடந்த கால சம்பவங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
முறைப்பாடளிக்க கோரிக்கை
செம்மணி மனித புதைகுழி சர்வதே தரத்துடன் முறையாக ஆராயப்படுகிறது முழுமையான ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்குவோம்.
காணாமலாக்கப்பட்டோருக்கு எமது அரசாங்கத்தில் நீதி கிடைக்காவிடின், எந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்கும்?
களுவாஞ்சிகுடி மற்றும் குருக்கள்மடம் மனித புதைகுழிகள் தொடர்பில் முறைப்பாடளிக்குமாறு பொதுக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். வழங்கப்படும் தகவல்கள் பாதுகாக்கப்படுவதுடன் தகவல் வழங்குபவரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
