நீதிபதி சரவணராஜாவின் தொடர்பு கிடைக்கவில்லை: சாலிய பீரிஸ்
முல்லைத்தீவு நீதவான் சரவணராஜாவை தொடர்பு கொள்ள முற்பட்டும், அது சாத்தியமாகவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சட்டத்தரணிகள் கூட்டிணைவின் உறுப்பினருமான அதிபர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலை விவகாரம் மற்றும் 'தியாக தீபம்' திலீபனின் நினைவேந்தல் விவகாரம் போன்றவற்றில் மிகமுக்கிய தீர்ப்புக்களை வழங்கிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா, உயிரச்சுறுத்தல்கள் மற்றும் மிகையான அழுத்தங்கள் காரணமாகத் தனது அனைத்துப் பதவிகளிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டு நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
இவரது பதவி விலகல் தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், வடக்கில் பாரிய போராட்டங்களை முன்னெடுக்க தமிழ் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் தீர்மானித்துள்ளன.
பதவி விலகல் கடிதம்
இந்த நிலையில், நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் மற்றும் இவ்விடயம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து ஆராய்ந்துவருவதாக சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சரவணராஜாவை தொடர்புகொள்ள முற்பட்டும், அது சாத்தியமாகவில்லை.
நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் கடிதம் குறித்தும் அவர் கூறியதாக சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்தும் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இவ்விடயம் தொடர்பில் ஆராயும் நோக்கில் கொழும்பில் நேற்றைய தினம் (29) காலை சட்டத்தரணிகள் கூட்டிணைவின் சந்திப்பொன்றும், மாலை சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டமொன்றும் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீதிபதி பதவி விலகல்: இலங்கைத் தீவில் நிலவும் கொடூரமான இனவெறிக்கு மிகச் சமீபத்திய உதாரணம் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
உலகளாவிய செய்திகளை அறிந்து கொள்ள ஐபிசி தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் |