முல்லைத்தீவு சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி ஜனாதிபதிக்கு கடிதம்
உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி முல்லைத்தீவு மக்களால் முல்லைத்தீவு மாவட்ட (மாஞ்சோலை) வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கடந்த 21.12.2025 அன்று முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வசிக்கும் குகநேசன் டினோயா எனும் 13 வயது சிறுமி சாதாரண உணவு ஒவ்வாமை காரணமாக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தார்.
குறித்த சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரியும், இனியும் இவ்வாறானதொரு இழப்பு ஏற்படாதிருக்கவும் முல்லைத்தீவு மக்கள் சமூகத்தினரால் இன்றையதினம் (29.12.2025) காலை 10 மணியளவில் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்தில் டினோயாவுக்கு நடந்த கொலை தொடர்பான உண்மைத்தன்மையினை பணிப்பாளர் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும், கொலைசம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர், தாதியர்களுக்கு அரசசேவையில் தொடர அனுமதியளித்துள்ளீர்களா? இவ்வாறாக நீதிநெறிமுறைக்கு முரணாக செயற்படும் வைத்தியர்கள், தாதியர்களுக்கு எவ்வாறான நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல நூற்றுக்ககணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த போராட்டத்திற்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன், பிரதேசசபை தவிசாளர் ,உறுப்பினர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புகள் , சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தின் பின்னர் முல்லைத்தீவு மக்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஜனாதிபதி செயலகத்திற்கும் அதன் பிரதிகள் சுகாதார அமைச்சர் கொழும்பு, செயலாளளர் நாயகம், சுகாதாரபணிமனை கொழும்பு, வடமாகாண ஆளுனர் அலுவலகம்,முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அலுவலகம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, முல்லைத்தீவு போன்றவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.









