கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் சிறப்பு விவாதம்
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் பதவி நிலை மற்றும் அதிகாரங்கள் தொடர்பான எழுத்தாணை மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அங்கு கடமையாற்றுபவர் ஒரு உப பிரதேச செயலாளர் மட்டுமே தவிர, அவர் பிரதேச செயலாளர் அல்ல என்ற முக்கிய திருப்பம் திறந்த நீதிமன்றத்தில் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
நீதியரசர்களான மாயாதுன்ன கோரேயா மற்றும் எம்.சி.எல்.பி. கோபல்லவா ஆகியோர் முன்னிலையில் நேற்று (07) இக்கூட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
கல்முனையன்ஸ் போரம் அமைப்பின் சார்பில் முபாரிஸ் எம். ஹனீபாவினால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுவுடன் (WRT/645/23), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனின் மனு (WRT/67/23) மற்றும் ஏ.எம். நஸீரின் மனு ((WRT/300/18) ஆகிய மூன்றும் இணைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
கலையரசனின் மனு
கலையரசனின் மனுவில் இடையீட்டு மனுதாரர்களாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

மனுதாரர் முபாரிஸ் எம். ஹனீபா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி விரான் கோரியா முன்னிலையாகிய நிலையில், கலையரசனின் மனுவை ஆதரித்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தனது சட்ட வாதங்களை முன்வைத்தார்.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஐந்தாவது பிரதிவாதி பிரதேச செயலாளர் அல்ல. மாறாக அவர் ஒரு உப பிரதேச செயலாளர் (ADS) மட்டுமே.
எனவே, பிரதேச செயலாளருக்குரிய முழுமையான அதிகாரங்களையோ அல்லது பதவிக் குறியீடுகளையோ அவர் பயன்படுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
சட்டமா அதிபர் திணைக்களம்
விசாரணையின் போது, 5ஆவது பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணியிடம் நிலைப்பாட்டைக் கேட்டறிந்தபோது, அவர் ஒரு உப பிரதேச செயலாளர் மட்டுமே என்பதைத் திறந்த நீதிமன்றத்தில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து குறுக்கிட்ட அரசுத் தரப்புச் சட்டத்தரணியும், இதுவே அரசின் நிலைப்பாடும் ஆகும் என உறுதிப்படுத்தினார்.
அரச அதிகாரியாக இருந்தபோதிலும், சட்டமா அதிபர் திணைக்களம் அவருக்காக முன்னிலையாகுவதில் இருந்து விலகியிருந்த நிலையில், அவர் தனக்காகத் தனிப்பட்ட (Private) சட்டத்தரணி ஒருவரையே நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வழக்கின் இறுதி விவாதங்களுக்காக எதிர்வரும் 07.10.2026 மற்றும் 02.11.2026 ஆகிய தினங்களை நீதிமன்றம் ஒதுக்கியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23