தமிழ், சிங்கள ஊடகத்துறையினரிடையே புரிதலை ஏற்படுத்தப் பாடுபட்ட கமல் லியனாராச்சி : தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம்
மூத்த ஊடகவியலாளரும் இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதித் தலைவருமான கமல் லியனராச்சியின் திடீர் மறைவு, சிங்கள, தமிழ் ஊடகத்துறைக்குப் பேரிழப்பாகுமென தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்துடன் நெருங்கிய உறவைப் பேணியவர் என்று கூறப்பட்டுள்ள அந்த அனுதாபச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
கமல் லியனராச்சி,லக்பிம என்ற சிங்கள நாளிதழில் மூத்த செய்தியாளராகக் கடமையாற்றியிருந்தார் நீதி என்ற சிங்கள வார இதழ் மூலம் ஊடகத்துறைக்குள் கால்பதித்திருந்தார். சுமார் முப்பது ஆண்டுகால ஊடகத்துறை அனுபவமுடைய இவர், ஆங்கில மொழியிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர்.
ஊடகத்துறையில் பல அனுபவங்களைப் பெற்று, 2006 ஆம் ஆண்டு முதல் இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் சிங்கள மொழிப் பிரிவுப் பொறுப்பதிகாரியாக் கடமையாற்றியிருந்தார்.
பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பதவி வகித்துப் பின்னர் முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதித் தலைவாகவும் பதவியுயர்வு பெற்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை மரணிக்கும்வரை பணியாற்றியிருந்தார்.
ஊடக வளவாளராகவும் கடமையாற்றிய கமல் லியனாராட்சி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்களை நடத்தியதுடன், அது தொடர்பான பொதுமக்களின் கருத்துக்களையும் பெற்று ஆவணப்படுத்தியிருந்தார்.
அவற்றை அரசியல் பிரதிநிதிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வதிலும் முன் நின்று செயற்பட்ட ஒருவர். செய்தியாளராகவும், ஊடக வளவாளராகவும் அவர் பணியாற்றிய காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தார்.
அவற்றைத் துணிவுடன் எதிர்கொண்டார். ஊடகத்துறைக்கு அச்சுறுத்தலான காலத்திலும்கூட அவர், நாட்டைவிட்டு வெளிநாடு செல்லவில்லை. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் ஊடகத்துறை முன்னேற்றத்துக்கான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த கமல் லியனராச்சி, போர்க் காலங்களில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பான பல விழிப்புணர்வுக் கூட்டங்களையும் நடத்தியிருந்தார்.
அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் தமிழ் ஊடகவியலாளர்கள் குறித்த விபரங்களைப் பெற்று, சம்மந்தப்பட்ட ஊடக அமைப்புகளுக்கு அறிவித்துக் குறைந்த பட்ச பாதுகாப்பை வழங்குவதில் முன்நின்று செயற்பட்டவர். குறிப்பாகப் போர்க் காலங்களில் சிங்கள- தமிழ் ஊடகத்துறையில் முரண்பாடுகள் எழுந்திருந்த பல சந்தர்ப்பங்களில், நிதானமாகச் செயற்படும் கமல் லியனாராச்சி, தேவைப்படும்போது வார்த்தைகளை அளந்து பேசுவார்.
பிரச்சினைகளைச் சுட்டிக்காடடும்போது தர்க்கரீதியாகவும், கூர்மையாகவும் தன் கருத்துக்களை முன்வைத்து, நியாயங்களை வெளிப்படுத்துவார். இதனாலேயே தமிழ் ஊடகத்துறையினர் கமல் லியனாராச்சியோடு நெருங்கிப் பழகியிருந்தனர்.
சிங்கள, தமிழ் நாளிதழ்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்படும் முறைப்பாடுகளை நிதானமாக அணுகிப் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்கும் பண்பும், குறித்த நாளிதழ் ஆசிரியர்களோடு உறவைப் பேணும் முறையும் அற்புதமானவை. ஒரு செய்தியாளனுக்கு இருக்க வேண்டிய பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை கமல் லியனராட்சியிடம் தாராளமாகவே இருந்தது.
போரின் பின்னரான சூழலில் சிங்கள, தமிழ் ஊடகத்துறைக்குள் இணக்கப்பாட்டையும் சரியான புரிதலையும் ஏற்படுத்தும் நோக்கில் நேரடியாகவும், மறைமகமாகவும் பல உரையாடல்களை நடத்திக் கொண்டிருந்த கமல் லியனாராச்சியின் திடீர் மறைவு, ஈடுசெய்ய முடியாதது.
