கந்தானையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி! மங்கள சமரவீரவின் செயலாளர் காயம்
புதிய இணைப்பு
கந்தானை காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று (3) காலை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காரில் பயணித்த ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காரில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், சம்பவத்தில் காயமடைந்த மற்றைய நபர் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய 'வெலி சமீர' என்ற சமீரா மனஹார எனவும் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் அவர் காயமடைந்த போதிலும், அவரது நிலைமை மோசமாக இல்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் உபாலி அமுனுவில எனவும், அவர் சமீர மனஹாரவின் மைத்துனர் என்றும் கூறப்படுகிறது.
இருவரும் உடற் பயிற்சி நிலையத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அவர்களது வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் வைத்து இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில் கந்தானை காவல்துறையினர் உட்பட பல காவல்துறை குழுக்கள் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கந்தானையில் (Kandana) இன்று (3) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில், காரில் இருந்த இருவரை இலக்கு வைத்து இன்று காலை குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மங்கள சமரவீரவின் செயலாளர்
மேலும், சம்பவத்தில் காயமடைந்த மற்றைய நபர் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் (Mangala Samaraweera) பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சமீரா மனஹார (Sameera Manahara) என தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், சமீர மனஹரவுடன் இருந்த உபாலி குலவர்தன என்பவரே கந்தானை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
