ஆலய விக்கிரகங்களைத் திருடிய இளைஞன் கைது! காவல்துறையினர் வெளியிட்ட தகவல்
யாழ் - காங்கேசன்துறை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் அண்மைய நாட்களில் இந்து ஆலயங்களில் 5 விக்கிரகங்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருடப்பட்ட 5 விக்கிரகங்களும் கைமாற்றப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
டிசம்பர் 9ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதிக்கும் இடையே தெல்லிப்பளை மற்றும் காங்கேசன்துறை காவல்துறை பிரிவுகளில் உள்ள இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடப்பட்டன.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழ் உப காவல்துறை பரிசோதகர் நிதர்சன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்த நிலையில் காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.
அவரது அலைபேசியில் திருடப்பட்ட 5 விக்கிரகங்களின் ஒளிப்படங்களும் காணப்பட்டன. தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மேலும் 2 விக்கிரகங்கள் கைப்பற்றப்பட்டன.
அவை இரண்டும் தெல்லிப்பளை காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.