சமஷ்டியால் நாடு பிளவுபடுமா : அலிசப்ரியைக் கேளுங்கள் என்கின்றார் கருணாகரம்
சமஷ்டி அதிகாரப் பரவலாக்கம் நடைபெற்றால் நாடு பிளவுபடும் என்று கூறுபவர்கள் வெளிநாட்டமைச்சர் அலிசப்ரி கூறியிருக்கும் தமிழர்கள் சமஷ்டியைக் கோருவதற்கு உரித்துடையவர்கள், தகுதியுடையவர்கள் என்பதனை உணர்வதுடன் அவரது உதாரணங்களையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
“வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக அடக்குமுறைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்ற இந்த வேளையில் சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் பேரினவாதத்தின் அடக்குமுறை உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
வெடுக்குநாறி மலையில் அடக்குமுறை
“ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாக இருந்தால் அவர்களது மொழியை, கலை கலாசாரம், மதத்தை அழித்தால் இனத்தை அழித்துவிடலாம் என்ற கோட்பாட்டுக்கமைய பேரினவாதம் தமிழினத்தை அழிப்பதற்கான ஏற்பாடுகளை தொடர்ச்சியாக செய்துவருகிறது.
தற்போதும் இந்த நாடு பொருளாதார ரீதியாகவும் உலகத்திலே அந்நியப்பட்டு இருக்கின்ற இந்த வேளையிலும் நாட்டு நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் இந்த அடக்குமுறை தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சிவராத்திரி தினம் என்பது இந்துக்களுக்கு ஒரு முக்கியமான தினம். சிவபெருமான இந்துக்களுக்கு முழுமுதற் கடவுள். அப்படித்தான் இந்துக்கள் நினைத்து வழிபடுகிறார்கள். அதிலும் சிவராத்திரியை விரதமிருந்து கண்விழித்து இந்துக்கள் அந்த நாளை அனுஷ்டிப்பது வழமையாக இருக்கின்றது.
இந்த வேளையில் தொல்பொருள் திணைக்களம் என்கின்ற ரீதியில் எங்களது பிரதேசங்கள் பல கபளீகரம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் வெடுக்குநாறி மலையும் அந்த வகையில் கபளீகரம் செய்யப்படுகின்றது.
ஆதிசிவன் கோவிலில் சிவராத்திரிக்குச் சென்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட அந்த பூசைக்காகச் சென்ற பூசகர், பக்தர்கள் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
13ஆவது திருத்தச்சட்டம்
சிறிலங்கா அரசாங்கமும் சிறிலங்கா அதிபரும் வாய்கிழியப் பேசுகின்றார்கள். இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும். வடகிழக்கிலே அமைதியைக் கொண்டுவரவேண்டும். 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புலம்பெயர் தேசங்களில் இருக்கின்ற தமிழ்த் தனவந்தர்கள் தங்கள் பொருளாதாரத்தை முதலிடவேண்டும். அதன் மூலமாக நாட்டின் பொருளாதாரம் உயரவேண்டும் என்று கூறுபவர்கள் மறைமுகமான நிகழ்ச்சி நிரலில் தமிழினத்தை, அவர்களுடைய கலை கலாசாரத்தை ஒழிக்கும் வேலைப்பாடாகவே இந்த வெடுக்குநாறிமலை சம்பவத்தை நாங்கள் பார்க்கின்றோம்.
உண்மையில் அதிபர் தற்போது நாடாளுமன்றத்திலும் கூறுகின்றார். 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், காவல்துறை அதிகாரத்தைப் பற்றி நாங்கள் இப்போது பேச வேண்டிய தேவையில்லையென்று. எந்த ஒரு அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு, ஒரு அரசு தன்னுடைய கடமைகளைச் சரிவர செய்ய வேண்டுமென்றால் அந்த அரசுக்கு காவல்துறையினர் இருக்க வேண்டும் என்பது மரபு.
ஏனென்றால் அந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்படும் சட்டங்களை அல்லது அரசியலமைப்பை பாதுகாப்பதற்குப் பொறுப்பானவர்கள் காவல்துறையினர். அதேபோன்று வட கிழக்குப் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக ஒரு நிரந்தரமான தீர்வு கொடுக்க வேண்டும் என்றால் காணி அதிகாரம் மற்றும் பல அதிகாரங்கள் இருக்குமென்றால் தற்போது வெடுக்குநாறி மலையில் இந்தப்பிரச்சினை ஏற்பட்டிருக்காது.
வெளிநாட்டமைச்சர் ஆற்றிய உரை
அதற்கு முன்னர் பல இப்படியான பிரதேசங்களில் புத்த பிக்குகளோ, அல்லது தொல்பொருள் திணைக்களமோ, வேறு ஏதாவது சக்திகளோ நீதிமன்றக் கட்டளையை மீறும் போது நீதிமன்றக்கட்டளைகளை பாதுகாக்க வேண்டியவர்கள் காவல்துறையினராகும்.
அதிகாரப்பரவலாக்கம் மேற்கொள்ளப்பட்ட பின்பு அந்த மாகாணத்துக்குள்ளே சில நீதிமன்றங்கள் வருகின்றன. அந்த நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் ஆணையை அந்த மாகாணத்துக்கு காவல்துறை அதிகாரம் இல்லாது விட்டால் மத்திய அரசாங்கம் நிறைவேற்றாது. அதுதான் கடந்த காலங்களிலும் நடைபெற்றது. தற்போதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
எனவே உண்மையிலேயே ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு இந்த நாட்டிற்குத் தேவையென்றால், இந்த நாடு பொருளாதாரரீதியாக முன்னேற்றமாக நகரவேண்டுமென்றால், சுபீட்சம் நிலவ வேண்டுமென்றால், இன ஐக்கியம் நிலவ வேண்டுமென்றால் காவல்துறை அதிகாரம் உட்பட அதிகாரங்கள் பரவலாக்கப்படுவதற்கான வழிவகைகள் செய்யப்படவேண்டும்.
தற்போதைய வெளிநாட்டமைச்சர் பல நாடுகளுக்குச் சென்று வருகின்றார். கடந்த நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையை நாங்கள் வரவேற்கின்றோம். அவர் உணர்ந்திருக்கின்றார்.
அவர் உண்மையிலேயே கோட்டபாயவினால் அரசியலுக்கு இழுத்துவரப்பட்டவர். கோட்டபாயவின் தனிப்பட்ட ஆஸ்தான சட்டத்தரணியாக இருந்தவர். தற்போது வெளிநாட்டமைச்சராக இருக்கிறார். அவரது கூற்று வரவேற்கத்தக்கது. அதை ஏனைய அரசியல்வாதிகள் உட்பட புரிந்துகொள்ளவேண்டும்.
வெளிநாட்டு முதலீடு
தமிழர்கள் சமஷ்டியைக் கோருவதற்கு உரித்துடையவர்கள், தகுதியுடையவர்கள் என்று கூறியிருக்கின்றார். சமஷ்டி அதிகாரப்பரவலாக்கம் இந்த நாட்டில் நடக்குமாக இருந்தால் நாடு பிளவுபடும் என்று கூறுபவர்கள் உணரவேண்டும்.
இந்த நாட்டின் வெளிநாட்டமைச்சர் கூறுகின்றார். அதிகாரப்பரவலாக்கம் ஊடாக இந்த நாடு பிளவுபடும் என்பது பொய்யானது. அதிகாரங்களைப் பரவலாக்கலாம். அதற்கு அவர் பல உதாரணம் காட்டியிருக்கின்றார். சுவிட்ஸ்லாந்தைக் காட்டியிருக்கின்றார்.
இலங்கை ஒரு சிறிய நாடு இங்கு அதிகாரங்களைப் பரவலாக்க முடியாது என்பவர்களுக்கும் ஒரு கருத்தைக் கூறியிருக்கின்றார். பெல்ஜியம் இலங்கையை விடச் சிறிய நாடு ஆனால் அங்கு அதிகாரங்கள் பகிரப்பட்டு இன்று பெல்ஜியம் வளர்ச்சியடைந்த நாடாக ஐரோப்பாவில் இருக்கின்றது.
எனவே இலங்கையைப் பொறுத்தமட்டில் அதிகாரங்களைப் பரவலாக்கி மாகாணங்களுக்கு பூரணமான அதிகாரங்களைக் கொடுத்தால் இந்த நாடும் புலம்பெயர் தேசத்துத் தமிழ்த் தனவந்தர்கள் முதலீடு செய்வார்கள்.
அவர்களது முதலீடுகளுக்குப் பாதுகாப்பில்லாமல் அவர்கள் எக்காரணம் கொண்டும் வரமாட்டார்கள். வருகின்ற ஒரு சிலரைக்கூட புலிப்பினாமிகள், தமிழீழ விடுதலைப்புலிகளை பின்பற்றுபவர்கள் என்று கூறுமளவிற்குத்தான் இந்த நாட்டின் அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள்.” எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |