கச்சத்தீவை இலங்கையிடம் கேட்க மறுத்த மோடி! ஸ்டாலின் கிளப்பும் அடுத்த சர்ச்சை
இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்பது தான் சரியான தீர்வாக அமையும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, இராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தான் இந்திய மீனவர்களின் மிகப் பெரிய பிரச்சினை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மௌனம் காக்கும் பா.ஜ.க
மேலும் கருத்து தெரிவித்த ஸ்டாலின், “இவ்விடயத்தை தொடர்ந்தும் கண்டித்து வருகிறோம். போராட்டங்களை நடத்துகிறோம்.எனினும், ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க அரசு எமது மீனவர்களுக்காக எதுவும் செய்யவில்லை.
கச்சத்தீவை மீட்பது தான் சரியான தீர்வாக அமையும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியிருக்கிறோம். அதனை அடிப்படையாக வைத்து ஒன்றிய அரசு இலங்கையிடம் கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.
இலங்கை சென்ற இந்தியப் பிரதமரும் இதனை வலியுறுத்த மறுத்துள்ளார்.
கச்சத்தீவை தர மாட்டோம் என இலங்கை வெளியுறவு அமைச்சர் கூறுகிறார். இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மறுத்து பேசியிருக்க வேண்டும். தமிழ்நாடு, தமிழர்கள் என்றால் மாத்திரம் ஏன் பா.ஜ.க அரசுக்கு கசக்கிறது?” என கேள்வியெழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
