அநுராதபுரத்தில் ஏற்பட்ட கடும் பதற்றம் - பிரதேசவாசிகளால் தாக்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் உயிரிழப்பு!
அநுராதபுரம் கெபித்திகொல்லேவ பிரதேசத்தில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மையின் போது, தாக்கப்பட்டு படுகாயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.
வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய காவல்துறை உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பிக்கு ஒருவர் உட்பட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அனுராதபுரம் – கெபித்திகொல்லேவ பிரதேசத்தில் யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார். அதன் பின்னர் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து நேற்று இரவு அங்கு கடுமையான பதற்றம் நிலவியது.
பிரதேசவாசிகளால் தாக்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்
இதன் காரணமாக போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டதோடு, வானத்தை நோக்கி துப்பாக்கிசூடும் நடத்தியிருந்தனர். இந்த கலவரத்தின்போது போது, காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டிருந்தார்.
சம்பவத்தில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
