தமிழர் தாயகம் கபளீகரம் செய்யப்பட்டு இடித்தழிக்கப்பட்ட இந்து ஆலயம் - எழுந்தது வலுவான கண்டனம்!
கீரிமலை சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு அதிபர் மாளிகை அமைக்கப்பட்டுள்ளமை இனவாத, மதவாத அரச பயங்கரவாதத்தினதும் அதற்கு துணை நிற்கும் இயந்திரமான இராணுவத்தினதும் கொடூர முகத்தை மீண்டும் உறுதி செய்துள்ளது என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய நாகரீகம் அற்ற செயலை மலையக சமூக ஆய்வு மையம் மற்றும் மலையக தமிழர் பண்பாட்டுப் பேரவை என்பன வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூர முகமே இது

இந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
முற்றாக அகற்ற வேண்டும்

இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் வலி.வடக்கில் இருந்த போர்த்துக்கீசர் கால மிக தொன்மை வாய்ந்த கீரிமலை சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு அதிபர் மாளிகை அமைக்கப்பட்டுள்ளமையை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அராங்கம் இந்து மக்களிடத்திலும், தமிழ் மக்களிடத்தும் இச்செயல் தொடர்பாக மன்னிப்பு கோருவதோடு, அமைக்கப்பட்டுள்ள அதிபர் மாளிகை முற்றாக அங்கிருந்து அகற்றப்பட வேண்டும்.
வழிபாட்டு சுதந்திரம் வேண்டும்

அதேவேளை, அங்கு இந்து மக்களின் சுதந்திர வழிபாட்டுக்கும் இடம் அளிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் துன்புற்றிருக்கும் மக்களின் வேதனையோடு தாங்களும் துணை நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.