தந்தை கெஹலியவிற்காக குரல் கொடுக்கும் மகள்!
சிறிலங்காவின் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இன்று (27) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.
தனது தந்தை கைது செய்யப்பட்டதன் மூலம், அவரது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக முறைப்பாடை மேற்கொண்டதன் பின்னர் சமித்ரி ரம்புக்வெல்ல ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கெஹலியவின் கைது
இலங்கைக்கு தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் சிறிலங்காவின் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் குற்றவாளி அல்ல என கெஹலிய ரம்புக்வெல்லவின் மகளான சமித்ரி ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சாதாரணமாக விசாரணைகளின் பின்னர் ஒருவர் கைது செய்யப்பட வேண்டுமென்ற சட்டம் உள்ள போதிலும், அதனை மீறும் வகையில் தனது தந்தை கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள்
சிறிலங்காவின் அரசியலமைப்புக்கமைய, காவல்துறையினரால் கைது செய்யப்படும் ஒருவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தனது தந்தைக்கு குறித்த வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும், இதனால் அவரது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனை அடிப்படையாக கொண்டு தான் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளதாக சமித்ரி ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |