கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
தரம் குறைந்த இம்யுனோகுளோபுலின் மருந்தினை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
மனிதப் பாவனைக்கு உதவாத தரம் குறைந்த மருந்துப் பொருள் இறக்குமதி மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த இரண்டாம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதன் பின் கடந்த(3) ஆம் திகதி மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது பெப்ரவரி 14ம்திகதி வரை விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டார்.
மேலும் பெப்ரவரி 14ம் திகதி வழக்கு விசாரணையின் போது விளக்கமறியல் உத்தரவு இன்றைய தினம் (29)வரை நீடிக்கப்பட்டிருந்தது.
விளக்கமறியல் நீடிப்பு
இந்நிலையில் வழக்கு இன்றைய தினம் (29) மாளிகாகந்தை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
அதன் போது சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சொகுசு வாகனமொன்றில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
அதே போன்று தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வழக்கின் இன்னொரு சந்தேக நபரான சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் கபில விக்கிரமநாயக்க தனியான நோயாளர் காவு வண்டி மூலம் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஒருவர் தவிர ஏனைய ஆறு சந்தேக நபர்களும் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் லோசனா அபேவிக்கிரம, சந்தேக நபர்களுக்கு எதிரான விளக்கமறியல் உத்தரவை மார்ச் மாதம் 14ம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |