கெஹெலியவின் கைது சிறிலங்கா அமைச்சர்களுக்கு ஒரு படிப்பினை : சமல் சஞ்சீவ சுட்டிக்காட்டு
சந்தேகத்திற்கிடமான மனித இம்யூனோகுளோபுலின் மருந்து வியாபாரம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டமை அனைத்து அமைச்சரவை அமைச்சர்களுக்கும் ஒரு பாடம் என வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் வைத்தியர் சங்கத்தின் தலைவர் நிபுணர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அமைச்சர் என்ற ரீதியில் தன்னிச்சையாக செயற்பட முடியாது என்பதையே இச்சம்பவம் காட்டுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பொதுமக்களின் வரிப்பணம்
கெஹெலிய மீதுள்ள நம்பிக்கையை காப்பாற்றி உண்மை தகவல்களை முன்வைத்து பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி மக்களுக்கு அதிகூடிய சேவையை வழங்குவதற்கு அமைச்சரவை முன்வர வேண்டும் எனவும் வைத்தியர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
இம்யூனோகுளோபுலின் தரப்படுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ் தயாரிக்கப்படும் போது, தடுப்பூசி குப்பிகளில் இரத்தத்தால் பரவும் நோய்களை அறிமுகப்படுத்துவதைத் தடுக்க மேம்பட்ட தொழில்நுட்ப உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.
கொடிய நோய்கள் பரவியிருக்கும்
ஆனால் சரியான தொழிற்சாலை அல்லது பராமரிப்பு இல்லாமல், இரத்த பிளாஸ்மாவைச் சேர்ப்பதன் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த இம்யூனோகுளோபுலினை கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் பயன்படுத்தியுள்ளனர்.
டெண்டரில் குறிப்பிட்டுள்ளபடி அனைத்து 22,500 தடுப்பூசி குப்பிகளையும் பயன்படுத்தியிருந்தால் எய்ட்ஸ், ஹெபடைடிஸ் போன்ற நோய்கள் இந்நாட்டில் பரவி மிகப் பெரிய படுகொலை நடந்திருக்கக் கூடும் எனவும் வைத்தியர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |