கெஹெலிய மீதான தடை: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் (Keheliya Rambukwella) நாடாளுமன்றக் கிளையில் உள்ள வங்கிக் கணக்கை முடக்கிய உத்தரவை நீக்குமாறு அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குறித்த தீர்ப்பு கொழும்பு (Colombo) மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகேவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகள் மற்றும் காப்பீட்டு ஒப்பந்தங்களை முடக்கி வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் சமீபத்தில் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதில் ஏற்பட்ட சேதம்
இருப்பினும், கெஹெலிய ரம்புக்வெல்லவின் ஓய்வூதியம் மற்றும் அவரது வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதில் ஏற்பட்ட சேதத்திற்கு பெறப்பட்ட 9.59 பில்லியனுக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகை வைப்புச் செய்யப்பட்டுள்ள நாடாளுமன்றக் கிளை வங்கிக் கணக்கும் நீதிமன்ற உத்தரவின் கீழ் முடக்கப்பட்டுள்ளன.
எனவே, குறித்த வங்கிக் கணக்கின் மீதான முடக்கத்தை நீக்க உத்தரவு பிறப்பிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் சமீபத்தில் கோரியிருந்தனர்.
மேற்படி கோரிக்கை தொடர்பான முடிவை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி, தொடர்புடைய கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
