தமிழர் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்: ஒருவர் படுகொலை
கிளிநொச்சி -பிரமந்தனாறு பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் நடுவீதியில் வைத்து ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர் .
இச்சம்பவமானது இன்று பிற்பகல் (4) இடம்பெற்றுள்ளது.
வாய்த்தர்க்கம்
பிரமந்தனாறு பகுதியில் உள்ள பாடசாலையில் இன்று(4) பிற்பகல் விளையாட்டு போட்டி நடைபெறுவதற்கு ஏற்பாடாக இருந்த நிலையில் பாடசாலையில் வைத்து இரு குழுக்களிடையே ஏற்பட்ட பிரச்சனை ஒன்றின் விளைவாக இரண்டு தரப்புகளுக்கு இடையில் பாடசாலை வளாகத்தில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பாடசாலை நிர்வாகம் இருதரப்புக்களையும் சமரசம் செய்து பாடசாலை வளாகத்தை விட்டு அனுப்பியிருந்தனர்.
தொடர்ந்தும் குறித்த இரண்டு தரப்பினரும் புன்னை நீராவி பிள்ளையார் ஆலய சந்தி பகுதியில் மீளவும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இது தொடர்பில் பிரதேச மக்களால் ஏற்கனவே காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற தரும்புரம் காவல்துறையினர் இருவரை கைது செய்து பின்னர் அவர்களை மீளவும் இறக்கி விட்டு சிறிது தூரம் சென்ற பின்னரே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் செயற்பாடு
கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியவர் வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிக்கு தருமபுரம் காவல்துறையினரை அழைத்திருந்தபோதும் பாடசாலைக்கு காவல்துறையினர் சமூகம் அளித்திருக்கவில்லை.
காவல்துறையினரின் பக்க சார்பான செயற்பாடும் தூண்டுதலுமே இக்கொலைக்கான காரணம் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பல தடவை கத்திக்குத்துக்கு இலக்கான 32 வயதுடைய சவரிமுத்து ஜோன் பற்றிக் என்ற குடும்பஸ்தரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
கத்திக்குத்து தாக்குதலை நடத்திய சந்தேகத்தில் தர்மபுரம் காவல்துறையினரால் இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |