மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா - காணக்கிடைக்கும் பழமையான பொக்கிஷங்கள்!
பிரித்தானியாவில் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா நாளையதினம் நடைபெறவுள்ளதுடன், இதற்கான ஏற்பாடுகள் மிகவும் கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
பிரித்தானிய நேரப்படி இந்த நிகழ்வுகள் முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த முடிசூட்டு விழாவில் உலகின் மிகச் சிறந்த ஆபரணங்கள் மற்றும் பழைமையான பொருட்களைக் காணமுடியும்.
இவற்றை முடிசூட்டு விழாவின்போது மட்டுமே காணமுடியும்.
செயின்ட் எட்வர்ட்ஸ் மகுடம்
செயின்ட் எட்வர்ட்ஸ் மகுடம் முடிசூட்டு ஆபரணங்களில் முதன்மையானதாகும், இது மன்னர் சார்ல்ஸின் சிரத்தில் சூட்டப்படும்.
இதற்கு முன் இந்த மகுடம் 1953 ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் அவருக்குச் சூட்டப்பட்டது.
தங்கத்தால் ஆன இந்த மகுடத்தில் உலகின் ஆக விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளதுடன், இதன் எடை சுமார் 2 கிலோகிராமாகும்.
அரச மகுடம்
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கின்போது காணப்பட்ட இந்த மகுடமும் மன்னருக்கு அணிவிக்கப்படும்.
இதன் எடை 1.06 கிலோகிராம், இதில் 2,868 வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கும் என்பதோடு, முத்து, மரகதம், நீலக்கல் ஆகியவையும் பதிக்கப்பட்ட மகுடமாகும்.
குதிரை வண்டிகள்
மன்னர் சார்லஸும், கமிலாவும் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்குச் (Westminster Abbey) செல்ல ஒரு குதிரை வண்டியும் திரும்புவதற்கு மற்றொரு வண்டியும் பயன்படுத்தப்படும்.
திரும்பும் வண்டி பாரம்பரிய தங்க முலாம் பூசப்பட்டது.
1762 ஆம் ஆண்டு மன்னர்களையும், அரசிகளையும் அழைத்துச் செல்வதற்காக இந்த வண்டி அமைக்கப்பட்டது.
செங்கோல்
நிகழ்வில் பல செங்கோல்களைக் காணப்படுவதுடன், அதில் சிலுவையுடன் கூடிய தங்கச் செங்கோல் மன்னரின் நல்லாட்சியையும் அதிகாரத்தையும் குறிக்கின்றது.
உலகின் மிகப் பெரிய நிறமற்ற வைரம் செங்கோலின் உச்சியில் பதிக்கப்பட்டுள்ளது.
வேல்ஸின் சிலுவை
இயேசுநாதர் அறையப்பட்ட சிலுவையிலிருந்து விழுந்த சில்லுகள் என வத்திகான் கூறும் இரு சிறு பொருட்கள் பிரிட்டனுக்குப் பரிசளிக்கப்பட்டவை.
போப் பிரான்சிஸ் அளித்த அந்த இரு துண்டுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிலுவையை நிகழ்வில் காணலாம்.
அரியணை
1300 ஆம் ஆண்டு முதலாம் எட்வர்ட் மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட 2 மீட்டர் உயரம் கொண்ட அரியணையில் மன்னர் அமர்வார்.
இது பிரிட்டனின் ஆகப் பழமையான அறைகலன்.
