ரியாத் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் ஹவுதி அமைப்பினரின் எச்சரிக்கை
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஹவுதி அமைப்பினர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஹவுதி அமைப்பினரின் தாக்குதல்களைத் தொடர்ந்து ஒக்டோபர் 10ஆம் திகி கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (25) முதல் விமானப் பயணங்களுக்காக இரண்டு முனையங்கள் ஒதுக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துச் சில மணி நேரங்களிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இராணுவ இலக்கு
கிங் காலித் சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து ஒரு 'இராணுவ இலக்காகக்' கருதப்படும் என ஹவுதி அமைப்பினரின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், விமான நிலையத்தை குறி வைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அனைத்து விமான நிறுவனங்கள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் விமானப் பயணிகளுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, கிங் காலித் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் நேற்று (24) வெளியிட்ட அறிவிப்பில், இன்று முதல் முனையம் 1 உள்நாட்டு விமானப் பயணங்களுக்கும், முனையம் 2 தேசிய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் சர்வதேச விமானப் பயணங்களுக்கும் ஒதுக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
ட்ரோன் தாக்குதல்கள்
ஹவுதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததைத் தொடர்ந்து, ஒக்டோபர் 10 ஆம் திகதி விமான நிலையத்தின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன.

இத்தாக்குதலானது ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்தில் சவுதி அரேபியா மீது நடத்தப்பட்ட மிக கொடூரமான தாக்குதலாகக் கருதப்படுகிறது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் உள்கட்டமைப்புகளை குறி வைத்து பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |