கடமை முடித்து வீடு திரும்பியவரின் தாலிக்கொடி அறுப்பு
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள துறைநீலாவணைக்கு செல்லும் பிரதான வீதியில், பெண் ஒருவரை வழி மறித்து தாலிக் கொடியை அறுத்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இன்று வியாழக்கிழமை (05) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடுதிரும்பிய பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் காத்துநின்ற இருவர் - குறித்த பெண்ணை வழிமறித்து மோட்டர் சைக்கிளில் இருந்து தள்ளிவிழுத்திவிட்டு அவரது கழுத்தில் இருந்த 6 அரைப்பவுண் தாலிக் கொடியை அறுத்துச் சென்றுள்ளனர்.
குறித்த கொள்ளையர்கள் தாலிக் கொடியை அறுத்து விட்டு பாதணிகளையும் கைவிட்டு, தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து குறித்த பெண் சத்தமிட்டதால், அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவரை காப்பாற்றியுள்ளனர்.
அவரின் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளதுடன், சம்பவ இடத்துக்குச் சென்ற கல்முனை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.