கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்!(படங்கள்)
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் இன்று (28) காலை 11 மணியளவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
''ஐ.நா இலங்கையின் போர் குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிப் பொறிமுறையினை உறுதிப்படுத்துக" எனும் தொனிப்பொருளில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் குறித்த போராட்டமானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றிருந்தது.
கொக்கு தொடுவாய் மனித புதைகுழி அகழ்வில் சர்வதேச விசாரணை வேண்டும் , சர்வதேசமே! போர் குற்ற விசாரணையை ஆரம்பிக்குக, பாதுகாப்பு வலயத்துக்குள் கைது செய்யப்பட்ட உறவுகள் எங்கே?, இலங்கை அரசே உன் கையில் ஒப்படைத்த உறவுகள் எங்கே?, இலங்கை அரசே! காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டும், உண்மை நீதி பொறுப்பு கூறலை உறுதிப்படுத்து போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கலந்து கொண்டனர்
இவ் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.