கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி சான்றுப்பொருட்கள் குறித்து பொது மக்களிடம் தகவல் கோரல்
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் அவற்றுடன் கண்டறியப்பட்ட பொருட்கள் தொடர்பான தகவல்கள் பொதுமக்களிடம் இருப்பின் அத்தகவல்களை வழங்கமுடியும் என காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த தகவல்கள் இருப்பவர்கள் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை தமது அலுவலகத்துக்கு வருகைதந்தோ அல்லது தொலைபேசி மூலம் தொடர்புகொண்டோ அவற்றை வழங்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
வலிந்து காணாமலாக்கப்பட்ட நபர்கள்
அந்த அறிவிப்பில், முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் உள்ள மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முதற்கட்டத் தொல்பொருள் பகுப்பாய்வுகள் இந்த மனிதப்புதைகுழி 1994 - 1996 க்கு இடைப்பட்ட காலப்பகுதியைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கூறுகின்றன.
காணாமல்போன மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட நபர்களைக் கண்டுபிடிப்பதற்கு எமது அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் பரந்துபட்ட முயற்சிகளின் ஓரங்கமாக, 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் 12(ஆ) பிரிவின் ஊடாக கீழான கடப்பாடுகளின் பிரகாரம் மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகளை எமது அலுவலகம் கண்காணித்து வருகிறது.
அதற்கமைய புதைகுழியில் உள்ள மனித எச்சங்களின் அடையாளம் குறித்துத் தீர்மானம் மேற்கொள்வதற்கு உதவுமாறு எமது அலுவலகத்திடம் முல்லைத்தீவு நீதவான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள பொதுமக்களிடம் இந்த வழக்குடன் தொடர்புடைய முக்கிய தகவல்கள் இருக்கக்கூடும் என எமது அலுவலகம் நம்புகிறது.
அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள்
எனவே கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களிடமிருந்து புதைகுழியில் உள்ள எச்சங்கள் தொடர்பான சாத்தியமான அடையாளங்கள், அவற்றின் உடலியல் அம்சங்கள், உடைகள், முன்னைய காலங்களில் ஏற்பட்டிருந்த காயங்கள் என்பன பற்றிய விபரங்கள், புதைகுழியில் உள்ள எச்சங்களின் நெருங்கிய உறவினர்களைத் தொடர்கொள்ளக்கூடிய தகவல்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளிடமிருந்து இந்த உடல்கள் இவ்விடத்தில் எவ்வாறு வந்தன என்பது பற்றிய சம்பவங்கள் பற்றிய தகவல்கள் போன்றவற்றை நாம் பொதுமக்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
இந்த வழக்கு தொடர்பான முக்கிய தகவல்களை அறிந்த உறவினர்கள், சாட்சிகள் மற்றும் ஏனைய நபர்களை எமது அலுவலகத்தின் பயிற்சிபெற்ற அதிகாரிகள் நேர்காணல் செய்வார்கள்.
அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் இரகசியத்தன்மையைப் பேணுவதற்கு எமது அலுவலகம் கடமைப்பட்டுள்ளது.
அதன்படி இதுகுறித்த தகவல்கள் பொதுமக்களிடம் இருப்பின், எமது தலைமை அலுவலகத்துக்கோ அல்லது எமது பிராந்திய அலுவலகங்களுக்கோ எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை வருகைதந்து அல்லது தொலைபேசி ஊடாக எம்மைத் தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா
