இலங்கைக்கு தென்கொரியா உதவும் : யூன் சுக் இயோல் உறுதி
இலங்கையின் முன்னேற்றத்திற்கு தொடர்ச்சியான பங்களிப்பை வழங்குவதாக தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது அமர்விற்கு இணையாக கடந்த செப்டெம்பர் 18 ஆம் திகதி இருநாட்டு தலைவருக்கும் இடையில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பைப் பாராட்டும் வகையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்திலேயே, யூன் சுக் இயோல் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் தென்கொரியாவுக்கு இடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த இரு நாட்டு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு வழி வகுத்திருந்தாக தென்கொரிய அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரிகளுக்கான அறிவுறுத்தல்
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது அமர்வை தொடர்ந்து, நாடு திரும்பியவுடன் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களை முன்னெடுக்கத் தேவையான பணிகளை விரைவில் மேற்கொள்ளுமாறு அந்த நாட்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கு தென்கொரியா வழங்கியிருக்கும் தொழில்வாய்ப்புக்களை அதிகரிக்கவும், காலநிலை மாற்றத்தை தணிப்பதற்கான இருநாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் விரைவில் கைசாத்திட எதிர்பார்ப்பதாகவும் தென்கொரிய அதிபர் தெரிவித்துள்ளார்.
வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு கட்டமைப்பின் ஊடாக இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் விசேட கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
பலப்படுத்தப்படவுள்ள உறவுகள்
விரிவான பரப்புக்குள் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்பதாக மீண்டும் உறுதியளித்துள்ள தென்கொரிய அதிபர், மேலதிகமான பேச்சுவார்த்தைகளுக்காக எதிர்வரும் நாட்களில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துப் பேச எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொரிய குடியரசு இந்து - பசுபிக் வலயத்திற்குள் தனது தலையீட்டை மேம்படுத்தி வரும் தருணத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக் கொள்வதன் அவசியம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரையை யூன் சுக் இயோல் பாராட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கை மக்களுக்கான ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டங்களை பாராட்டியுள்ள தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல், சிறிலங்கா அதிபருக்கு சக்தியையும் நீண்ட ஆரோக்கியத்தையும் வேண்டி பிராத்திப்பதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
South Korean President Yoon Suk Yeol, in a letter to President Ranil Wickremesinghe, pledged his country's assistance in developing programs to generate employment for young people, reinforcement of employment cooperation and (1/3) pic.twitter.com/RiQjXOEenV
— President's Media Division of Sri Lanka - PMD (@PMDNewsGov) November 3, 2023