பங்களாதேஷிடம் இருந்து 58 ஆயிரம் அமெரிக்க டொலர் மதிப்புள்ள மருந்துகள் : சுகாதார அமைச்சு
பங்களாதேஷிடம் இருந்து 58 ஆயிரம் அமெரிக்க டொலர் மதிப்புள்ள மருந்துகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன மற்றும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரீக் எம்.டி அரிஃபுல் இஸ்லாமுடனான சந்திப்பின் போது இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தெரிவிக்கையில்,
மருத்துவ உதவி
“இந்த மருத்துவ உதவியில் சுமார் 54 வகையான மருந்துகள் வழங்கப்படவுள்ளன.
மேலும் புற்றுநோய் மற்றும் சிறுநீரகநோய் சிகிச்சைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும்.
இதனை தொடர்ந்து பங்களாதேஷ் சுகாதார அமைச்சு சார்பில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள மருந்துகள் வழங்கப்பட எதிர்பார்க்கப்படுகிறது.” என்றார்.
இதன்போது, குறித்த மருத்துவ உதவிகளுக்காக இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரிடம் சுகாதார அமைச்சர் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.