குருந்தூர் மலை சிங்களவர்களுடைய இடம் அல்ல : மோகன்
குருந்தூர் மலை என்பது பௌத்தர்களுடைய இடமாக இருக்கலாம் ஆனால் நிச்சயமாக சிங்களவர்களுடைய இடம் அல்ல என இந்து பௌத்த ஒற்றுமை அமைப்பின் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளருமான மோகன் தெரிவித்தார்.
ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிக்கையில்
தமிழர்கள் துணிந்து கூற வேண்டும் பௌத்தம் எங்களுடையது, புத்த பெருமான் சிங்களவர் அல்ல பாளி மொழியில் எழுதப்பட்ட விடயங்கள் மட்டும்தான் இருக்கின்றது. பூஜாவலிய என்ற ஒரு நூல் மாத்திரம் தான் சிங்கள மொழியில் ஆதாரமாக இருக்கின்றது.
புத்தனுடைய பௌத்த மதத்தில் சாதியம் என்பது கிடையாது ஆனால் சிங்களப் பிரபுக்கள் இந்த சாதிப் பிரிவுகளை அமைத்தார்கள்.
பௌத்த மதம் என்பது வேறு சிங்கள மக்கள் என்பது வேறு. வெவ்வேறு நாடுகளில் இருப்பவர்கள் வெவ்வேறு முறைகளில் வழிபடுகின்றனர். ஆகவே மதம் என்பது வேறு மொழி என்பது வேறு.
பௌத்த மதம்
தமிழர்களுடைய மதம் இந்துமதம் தான். காலத்தால் வெள்ளையர்களின் ஆக்கிரமிப்பால் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றினார்கள். யாழ்ப்பாணத்தில் இன்று 36 சதவீதமானவர்களே இந்துக்கள் ஆவார்.
தென்னிலங்கைக்கு சென்ற பௌத்த மதம் பௌத்தர்களாக பெரும்பான்மை சிங்களவர்கள் இருக்கின்றமையால் தமிழர்களும் இந்தியர்கள், புத்தபெருமானும் இந்தியர் ஆக இருப்பதால் தங்களுக்கென்று ஒரு மதம் இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
சிங்கள மக்கள் மத்தியில் பௌத்த மதம் அரச மதம் என்ற ஒரு மனோபாவத்தை சிங்கள ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கின்றார்கள். அதற்கேற்ற வகையில் பௌத்தத்தை பேரினவாத சக்தி பக்கத்தில் இழுத்து வைத்திருக்கின்றார்கள்.
பௌத்த மதம் சிங்களவர்களுக்கு சொந்தமான மதம் இல்லை. பௌத்தத்தைப் பின்பற்றுபவர்களுக்கே சொந்தமானது.
குருந்தூர் மலை
சிங்கள ஆட்சியாளர்களினுடைய பெருந்தேசியக் கொள்கை தமிழர்களுடைய நிலவுடைமை பாரம்பரியங்கள் சொத்துக்கள் போன்ற பல வகையான விடயங்களை சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் அவர்கள் அபகரித்திருக்கின்றார்கள்.
ஏறக்குறைய 80சதவீதமான வடபகுதி மக்கள் பௌத்தர்களாக இருந்திருக்கின்றார்கள். ஆனால் காலத்தால் அவர்கள் இந்துக்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் மாறிவிட்டார்கள்.
அதனுடைய தொல்லியல் சான்றுகளாக கந்தரோடை, நாகவிகாரை போன்றன இருக்கின்றன. அதேபோன்று குருந்தி விகாரையும் இருந்திருக்கலாம். ஆனால் அது சிங்கள மக்களுடைய குருந்தி விகாரை அல்ல தமிழர்களுடைய பாரம்பரியப் பிரதேசமாகும்.
