யார் அகதி..! : உலகத்தமிழர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய தீர்ப்பு
‘உலகம் முழுவதுமுள்ள அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல’ என்று இலங்கைத் தமிழர் தொடர்பான தீர்ப்பு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது என தமிழகத்திலிருந்து வெளியாகும் ‘தினமணி’ நாளிதழ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளமை வருமாறு,
விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக சுபாஷ்கரன் என்பவர், 2015-ல் கைது செய்யப்பட்டு, 2018-ல் ராமநாதபுரம் விசாரணை நீதிமன்றம் பத்தாண்டு சிறைத்தண்டனை விதித்த நிலையில், மேல் முறையீட்டில் 2022-ல் 7 ஆண்டுகளாகத் தண்டனையைச் சென்னை உயர் நீதிமன்றம் குறைத்தது. மேலும், தண்டனை முடிந்ததும் இந்தியாவில் இருக்கக் கூடாது; இலங்கை திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
தண்டனைக் காலம் முடிவடையவுள்ள நிலையில், சுபாஷ்கரனை நாடு கடத்தாமல் இந்தியாவிலேயே தங்கியிருக்க அனுமதி கேட்டுத் தமிழ்நாடு அரசிடம் அவருடைய மனைவி விண்ணப்பித்தார்; அரசு பதிலளிக்கவில்லை. தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தியா தர்ம சத்திரம் அல்ல
இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த சுபாஷ்கரன், மனைவி, குழந்தைகள் இந்தியாவில் குடியேறிவிட்ட நிலையில், தன்னையும் இங்கேயே இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். விசாரித்த நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, கே. வினோத்சந்திரன் ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வோ மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது.
கூடவே... “உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? ஏற்கனவே, நாங்கள் 140 கோடி மக்கள்தொகையுடன் போராடி வருகிறோம். அனைத்து நாடுகளிலுமிருந்து வரும் வெளிநாட்டினரை வரவேற்று மகிழ்விக்க இந்தியா தர்ம சத்திரம் அல்ல. இந்தியாவில் குடியேற உங்களுக்கு என்ன உரிமையுள்ளது? இலங்கையில் உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டுக்குச் சென்று அடைக்கலம் கோருங்கள்” என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து, வழக்கு தொடர்பான சுபாஷ்கரனை மட்டுமல்ல; தாண்டி ஒட்டுமொத்த தமிழர்களையுமே புறந்தள்ளுவதாகவும் நிராகரிப்பதாகவும் இருப்பதாகத் தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் மட்டுமின்றிப் புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களையும் வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.
இனக் கலகத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், 1980-களில் தொடங்கி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவில் தமிழ்நாட்டை நோக்கியும் தமிழ்நாட்டின் வழியாக உலகின் பிற நாடுகளை நோக்கியும் ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் வெளியேறினர்; வெளிநாடுகளுக்குச் செல்வதற்குச் செலவிட முடியாத நிலையிலிருந்த, பெரும்பாலும் ஏழைகள், நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த சில லட்சம் பேர், தமிழ்நாட்டிலேயே தங்கிவிட்டனர்.
பாதுகாப்பு என கருதியதே துயரங்களுக்கு காரணமாகிவிட்டது
பிற நாடுகளைவிடவும் ஒரே மொழி, ஒரே பண்பாடு மட்டுமல்ல, தாயான தமிழகம், நாமெல்லாம் தமிழர்கள் என்ற உணர்வும் நம்பிக்கையும் இவர்களைப் பாதுகாப்பு எனக் கருத வைத்துவிட்டது – அதுவே ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து அனுபவித்துக்கொண்டிருக்கும் அனைத்துத் துயரங்களுக்கும்கூட காரணமாகியும் விட்டது!
1983 இனக் கலகத்தைத் தொடங்கி, இலங்கையிலிருந்து உயிருக்குப் பயந்து தமிழர்கள் வெளியேறத் தொடங்கினார்கள். தொடர்ந்தது ஆயுதப் போராட்டமும் அரச அடக்குமுறைகளும் இராணுவ நடவடிக்கைகளும். தொடர்ந்து பல்லாயிரக்கணக்கில் ஈழத் தமிழர்கள் வெளியேறினர்.
தமிழ்நாட்டின் வழியாகவும் பிற வழிகளிலும் பிரிட்டன், ஜெர்மனி, சுவீடன், நோர்வே, டென்மார்க், சுவிட்சர்லாந்து போன்ற பிற ஐரோப்பிய நாடுகள், கனடா, அவுஸ்திரேலியா என எங்கெங்கோ இவர்கள் புலம்பெயர்ந்து சென்றனர். இன்றைக்குத் தமிழ்நாடு, அதாவது இந்தியா தவிர்த்துப் புலம்பெயர்ந்து சென்ற நாடுகளில் எல்லாமும் (அல்லது பெரும்பாலானவற்றில்) மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் கண்காணிப்புக்குப் பிறகு அல்லது சில வரையறைகளுக்கு உள்பட்டுக் குடியுரிமை பெற்றுத் தற்போது அந்த நாட்டு மக்களாகவே மாறிவிட்டனர். அந்தந்த நாடுகள் அப்படியே அனைவரையும் சொந்த மக்களாக உள்வாங்கிக்கொண்டுவிட்டன. இந்த நாற்பது ஆண்டுகளில் மூன்றாம் தலைமுறை கண்டுவிட்ட இவர்களின் குழந்தைகளில் பலருக்குத் தமிழேகூட ஓரளவு பேச மட்டும்தான் தெரியும்.
திறந்தவெளிச் சிறைச்சாலைக் கைதிகள்
ஆனால், தமிழை, தமிழர்களை நம்பித் தமிழ்நாட்டுக்கு வந்தவர்களின் நிலை? இன்னமும் பெரும்பாலானோர் அகதிகள் முகாமில் திறந்தவெளிச் சிறைச்சாலைக் கைதிகளைப் போலவே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் மட்டும் 106 முகாம்கள் இருக்கின்றன. சுமார் 60 ஆயிரம் பேர் இந்த முகாம்களிலும் 30 ஆயிரம் பேர் முகாம்களுக்கு வெளியேயும் (வெளிப்பதிவு) வாழ்ந்துவருகின்றனர் எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்தக் கணக்கு எப்போது எடுக்கப்பட்டதெனத் தெரியவில்லை. உள்ளபடியே, தமிழ்நாட்டில் அகதிகளாக 1.46 லட்சம் பேர் வாழ்ந்துவருவதாகவும் இவர்களில் கால் பங்கினர் குழந்தைகள், சிறார்கள் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1983 தொடக்கம் அலை அலையாக வந்தவர்கள் இவர்கள். இங்கே இவர்களும் மூன்றாம் தலைமுறை கண்டுவிட்டனர். ஆனால், இன்னமும் அகதிகளாகவே முகாம்களுக்குள் பத்துக்குப் பத்து சதுர வீடுகளில் (அல்லது வீடுகளைப் போன்றதொரு கட்டுமானத்தில்) வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். பெரும்பாலான நாடுகளில் ஒரு குழந்தை அந்த நாட்டில் பிறந்தால், பிறப்பால் தானாகவே, அந்த நாட்டின் குடிமகனா(ளா)கிவிடும். ஆனால், இங்கேயோ பிறக்கும்போதே அகதிதான் (ஏதோ குறிப்பிட்ட காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மட்டும் குடியுரிமை தந்திருப்பதாகக் கூறுகிறார்கள்).
மாதந்தோறும் முகாம்களில் சோதனைகள்
வாராவாரம் என்பது மாறி இன்னமும் மாதந்தோறும் முகாம்களில் சோதனைகள் நடத்தப்பட்டுக் கொண்டுதானிருக்கின்றன. ஒருவர் எங்கேயாவது வெளியூர் செல்வதாக இருந்தால் தலையாரி அல்லது கிராம நிர்வாக அலுவலரில் தொடங்கி, வட்டாட்சியர் வரையிலான முன் அனுமதி பெற வேண்டும் (கிட்டத்தட்ட அந்தக் கால குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் போல). ஊருக்கு அல்லது அருகிலுள்ள நகருக்கு யாராவது விஐபிக்கள் வந்தால் தொடர்ந்தாற்போல மூன்று நான்கு நாள்கள்கூட முகாம்களில் சோதனைகள் இருக்கும்.
இந்தக் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளில் பயில முடியும். ஆனாலும், மருத்துவம் போன்ற படிப்புகளைப் படிக்க முடியாது. கடவுச் சீட்டுகள் கிடையாது. எனவே, வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது. ஒருமுறை வெளியேறினால் மீண்டும் இந்தியாவுக்குள் வர முடியாது. அகதிகளில் பலரும் சாதாரண வேலைகளில்தான் இருக்கின்றனர். நல்ல படிப்பு, நல்ல வேலை கிடைக்காத நிலையில், இவர்களில் சிலரை சமூக விரோத சக்திகள் பயன்படுத்திக்கொள்ளும்போது, பொதுப் புத்தியில் ஒட்டுமொத்தமாக இவர்கள் அனைவர் மீதும் பழிபோடப்படுகிறது.
அகதிகளுக்காகக் குடும்ப அட்டை போன்ற வசதிகள் செய்துகொடுக்கப்பட்ட போதிலும், இன்னமும்கூட சிறப்பு முகாம்கள் என்ற பெயரிலும் கணிசமானோர் சிறைவைக்கப்பட்ட நிலையில்தான் இருக்கின்றனர். இவற்றில் குடியுரிமை தவிர்த்த வேறு பல பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க மத்திய அரசு தேவையில்லை, நினைத்தால், மாநில – தமிழ்நாட்டு அரசாலேயே – செய்துவிட முடியும். ஆனால்...
இந்த நிலையில், தனியொருவர் தொடர்ந்த வழக்கில், மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்ததைத் தாண்டி, எங்கேயாவது போங்கள், இங்கே வராதீர்கள், இதுவென்ன தர்ம சத்திரமா? என்றெல்லாம் உச்ச நீதிமன்றமே கருத்துத் தெரிவித்திருப்பதைக் கேட்டு, தமிழர்கள் மட்டுமல்ல, அகதி வாழ்வை நினைத்துப் பார்க்கும் அனைவருமே அதிர்ந்திருக்கிறார்கள்.
தீர்ப்பிற்கு எதிராக எதிர்வினையாற்றாத அரசியல் கட்சி தலைவர்கள்
இலங்கை திரும்ப இயலாது; இங்கிருக்க அனுமதி கொடுங்கள் என்றொருவர் கேட்டிருக்கிறார். இங்கேயோ முகாம்களில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் எதிர்காலம் தெரியாமல் அகதிகளாகக் கிடக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களோ ஏழரைக் கோடி பேர்! ஒற்றைத் தமிழரை நிராகரிக்கும் நீதிமன்றத்தின் கருத்தானது, எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகி, ஒட்டுமொத்த தமிழர்களை மட்டுமின்றி உலகெங்கும் வெளியேறுகிற இன்னபிற அகதிகளையும் நிராகரிப்பதாகிவிடக் கூடிய ஆபத்து இருக்கிறது. இதுபற்றி ஏனோ பெரிய அரசியல் கட்சிகளின் பெரிய தலைவர்களும்கூட எதிர்வினையாற்றாமல் கடக்கின்றனர்.
ஆமாம், கொப்பூழ்க் (தொப்புள்) கொடி உறவு, அரைஞாண் கொடி உறவு, அவரைக் கொடி, வெற்றிலைக் கொடி உறவு என்றெல்லாம் அவ்வப்போது கூறிக் கொண்டிருக்கிறார்களே? இவற்றுக்கெல்லாம் தமிழில் என்னதான் பொருள்?
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நன்றி - தினமணி

