தமிழ், சிங்கள மக்கள் சகோதரர்களே - பேதங்கள் கிடையாது என்கிறார் கம்மன்பில
தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சகோதரர்கள் எமக்குள் எவ்விதமான பேதங்களும் கிடையாது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று குருந்தூர் மலை விவகாரம் தொடர்பாக அவ்விடத்திற்கு விஜயம் செய்து மக்களுடன் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இப்பகுதியில் இருந்து கொழும்பிற்கு வரும் அரசியல்வாதிகளே சில பிரச்சினைகளை வேண்டுமென்றே உருவாக்குகின்றார்கள் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பரம்பரையாக இருந்த காணிகள்
இதுதொடர்பில் அங்கிருந்த தமிழர் தரப்பினரில் ஒருவர், “நாங்கள் மூன்று நான்கு தலைமுறையாக இவ்விடத்தில் தான் இருக்கின்றோம் எனவும் தொல்லியலுக்கும் எமக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை. அதனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கும் உள்ளது அரசுக்கும் உள்ளது.
நாம் உங்களிடம் கேட்பது தொல்லியல் திணைக்களத்தின் கீழுள்ள அந்த 29 ஏக்கர் நிலத்தை அல்ல. நாங்கள் பரம்பரையாக இருந்த காணிகளை மாத்திரமே விட்டுத் தரும்படி கேட்டு கொள்கின்றோம்” என்றார்.
இது தொடர்பில் உதய கம்மன்பில கருத்து தெரிவிக்கையில், உண்மையை உண்மையான கண்கொண்டு காண வேண்டும் என்பதற்காகவே நாம் இங்கு வந்துள்ளோம்.
இது 2100 வருடங்கள் பழமையான விகாரை. இலங்கை என்பது எங்களுடைய உரிமை கிடையாது. அது முழு உலகிற்குமான உரிமையாகும்.
இவ்வாறான பழமையான விடயங்கள் வேறு நாடுகளில் இல்லை. இது எம் எல்லோருக்கும் உரித்தானது ஆகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்களின் கோரிக்கை தொடர்பில் தொல்பொருள் திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களத்துடன் கலந்துரையாடி இதற்கான தீர்வுகள் எட்டப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
