அழிவுப் போராக மாறும் உக்ரைன் யுத்தம்!! ஆய்வில் கிடைத்த தகவல்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு இன்று 100 நாட்கள் கடக்கின்ற நிலையிலும், இதனை ஒரு யுத்தம் என்று கூறுவதை ரஷ்ய ஊடகங்கள் தவிர்த்து வருகின்றன.
மொஸ்கோவிற்கு எதிராக மேற்குலக நாடுகள் மூன்றாம் உலகமகா யுத்தத்தை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் மக்களுக்கு தவறான வழிநடத்தலை மேற்கொண்டு வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ரஷ்யாவால் சிறப்பு இராணுவ நடவடிக்கை எனப் பொருள் படுத்தப்படும் உக்ரைன் மீதான படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 நாட்களை எட்டியுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆரம்பித்து நீண்ட காலம் இந்த யுத்தம் பயணிக்கின்றமை தொடர்பில் நேட்டோவின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் மேற்கத்திய நாடுகளை எச்சரித்துள்ளார். இந்தப் போர் ஒரு "அழிவுப் போராக" மாறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்யா தற்போது கிழக்கு டொன்பாஸ் பிராந்தியத்தில் "தந்திரோபாய வெற்றியை" அடைந்து வருகின்ற போதிலும் அதற்கு பாரியளவில் செலவிடப்பட்டு வருவதாக பிரித்தானிய இராணுவ உளவுத்துறை கூறியுள்ளது.
உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பை மொஸ்கோ படைகள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கிழக்கு பகுதியில் முக்கிய நகரமான செவெரோடோனெட்ஸ்கில்(Severodonetsk) யுத்தம் நீடிப்பதுடன், குறித்த பகுதி ரஷ்ய துருப்புக்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
பரிய நிலப்பரப்பான டொன்பாஸைக் கைப்பற்றுவதற்கான மொஸ்கோவின் முயற்சியின் ஒரு பகுதியாக, லுஹான்ஸ்க்கை அடுத்து செவெரோடோனெட்ஸ்க் குறிவைக்கப்பட்டு வருகின்றது.
எவ்வாறெனினும் உக்ரைனில் பாரிய அழிவுகளையும், யுத்தக் குற்றங்களையும் ரஷ்யா இழைத்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ரஷ்ய ஊடகங்கள் இதனை ஒரு யுத்தமாகவே கருதவில்லை என்பது தெரியவந்தள்ளது.
இது ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் மக்களை ஊடகங்கள் தவறாக வழிநடத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
