தாய்மார்கள் வெளிநாடு செல்வதை தடுக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பரிந்துரை
இலங்கையில் தொழில்புரியும் பெண்களுடைய 0-5 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புத் தொடர்பில் தற்பொழுது காணப்படும் பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை பற்றி துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
0-5 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகள் தாயின் பாதுகாப்பு இன்றி வளர்ந்துவரும் சூழ்நிலையில் ஏற்படுகின்ற சமூகத்தாக்கம் எதிர்வரும் 20-25 வருடங்களில் சமூகம் என்ற ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பிலும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
பகல்நேர பராமரிப்பு மையங்கள்
சிறுவயதிலேயே குழந்தைகளுக்கான பாதுகாப்பான மற்றும் முறையான பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்படும் பகல்நேர பராமரிப்பு மையங்களின் வலுவான தேவை உள்ளது என்றும், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
மேலும் பகல்நேர பராமரிப்பு மையங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் குறிப்பிட்ட நிறுவனம் இல்லை எனவும், பகல்நேர பராமரிப்பு மையங்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்றும், இவற்றின் தரங்களில் குறைபாடுகள் இருப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் உள்ள பகல்நேர பராமரிப்பு நிலையங்களின் தரத்தை ஒழுங்குபடுத்தவும், 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்வதை தடுக்கும் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தவும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பரிந்துரைத்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |