நீதிவானுக்கு எதிரான கருத்து: கஸ்ஸப தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருகோணமலை நீதிவானுக்கு எதிராக பலாங்கொட கஸ்ஸப தேரரால் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த கருத்துக்களுக்கு கடும் கண்டனத்தையும் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டு, 2026 நவம்பர் 13ஆம் திகதியிட்டு சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் இன்று குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
சட்டத்தரணிகள் சங்கம்
நீதித்துறையின் சுதந்திரம் என்பது ஜனநாயக ஆட்சியினதும் சட்டத்தின் ஆட்சியினதும் அடிப்படைத் தூண்களில் ஒன்றாகும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீதிபதிகளும் நீதிவான்களும் அரசியல், மத, சமூக மற்றும் தனிநபர் அழுத்தங்கள் அல்லது அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் சுதந்திரமாகவும் பக்கச்சார்பின்றியும் தமது கடமைகளை முன்னெடுப்பதற்கான சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சட்டத்தின் ஆட்சியும் நீதித்துறையின் சுதந்திரமும் எந்தவொரு தனிநபராலோ அல்லது அமைப்பினாலோ பாதிக்கப்படக்கூடாது எனத் தெரிவித்துள்ள சங்கம், நீதிமன்றத் தீர்ப்புகள் தொடர்பில் அதிருப்தி இருப்பின், மேன்முறையீடு உள்ளிட்ட சட்டரீதியான வழிமுறைகளின் ஊடாகவே அவற்றைச் சவாலுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் அல்லது சாதாரண பிரஜைகள் என எவராக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் எனவும், நீதித்துறையின் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் பாதிக்கும் வகையில் நீதிபதிகள் மற்றும் நீதிவான்களுக்கு அழுத்தம் பிரயோகிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் அச்சுறுத்தல்கள், அவமதிப்புகள் மற்றும் தலையீடுகளை வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கம், சம்பவத்தின் தன்மை மற்றும் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு சட்டத்திற்கு அமைவான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரியுள்ளது.
நீதித்துறையின் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்பின் அடிப்படை விழுமியங்களைப் பாதுகாப்பதில் தமது உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாகவும் திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |