சரத்பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : ரஞ்சித் மத்துமபண்டார சுட்டிக்காட்டு
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) கட்சித் தலைமையை விமர்சிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு (Sarath Fonseka) எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துமபண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.
அதன்படி, கட்சிக்குள் இருந்து கொண்டு தலைமையை விமர்சிப்பது ஏற்புடையது அல்ல எனவும் சரத் பொன்சேகா அதிபருடன் இணைவதற்கு தயாராகி வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் “ ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கடந்த வாரம் நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) மறைமுகமாகத் தாக்கிப் பேசியிருந்தார்.
லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு ஆலோசனை
அத்துடன் தன்னை நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கவிடாது எதிர்க்கட்சிகள் தடுப்பதற்கு முயற்சிப்பதாகவும் பொன்சேகா குற்றம் சுமத்தியிருந்தார்.
மேலும் தனக்கு நாடாளுமன்றில் பேசுவதற்கு நேரம் வழங்க வேண்டாம் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்லவுக்கும் (Lakshman Kiriella) ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொன்சேகா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த விடயம் தற்போது பேசுபொருளாக மாறியதையடுத்து, லக்ஷ்மன் கிரியெல்ல இது குறித்து பதிலளித்திருந்தார்.
இறுதி தீர்மானம்
அதன்படி, கட்சி மீது வழக்கு தொடுத்து தலைமையை விமர்சிக்கும் ஒருவருக்கு எவ்வாறு நாடாளுமன்றத்தில் கால அவகாசம் வழங்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எவ்வாறாயினும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை“ எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |