அரசியலுக்கு அப்பால் ஒன்றுபட்டு அபிவிருத்திக்காக உழைப்போம் - பிள்ளையான் தெரிவிப்பு
நாம் அனைவரும் அரசியலுக்கு அப்பால் ஒன்றுபட்டு மாவட்டத்திற்கான அபிவிருத்திக்காக உழைப்போம் என இராஜங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
இன்று நாவற்காடு பலாக்காடு வாய்க்கால் புனருத்தாரண நிகழ்வின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
உணவுத் தட்டுப்பாடு
“உற்பத்தி துறையை அதிகரிக்க வேண்டுமாக இருந்தால் தொழில்நுட்ப ரீதியாக - பயிர் பயிரிடல், அதை தயார்படுத்தல், அதை எவ்வாறு பொதிசெய்தல் போன்ற விடயங்களை நாம் தீவிரமாக ஆர்வம் காட்ட வேண்டும்.
அதற்கான தேவைப்பாடு தற்போது எழுந்துள்ளது. உணவுத் தட்டுப்பாடு என்பது இலங்கையில் மாத்திரம் அல்லாது உலகம் பூராகவும் ஏற்பட்டுள்ளது.
தேங்காய் எண்ணெயின் விலை மிக சடுதியாக அதிகரித்துள்ளது. ஐரோப்பா, ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இலங்கை தேங்காய் எண்ணெயின் தேவைப்பாடு அதிகமாக தற்போது காணப்படுகின்றது.
இதை நான் ஏன் கூறுகின்றேன் என்றால், நாம் இன்னும் எங்களது பகுதிகளில் அவற்றை இனம் கண்டு கொள்ளவில்லை.
கிராமிய உற்பத்தியில் கச்சான் தொடக்கம் முந்திரி பருப்பு வரை சரியான முடிவுப் பொருளாக நாம் செய்யவில்லை. நிர்ணய விலையை இன்று வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
தொழில்நுட்ப மாற்றம்
இவற்றையெல்லாம் ஈடு செய்யக்கூடிய தொழில்நுட்ப மாற்றத்தை நோக்கி விவசாய அமைப்புகள் பொது அமைப்புக்கள் மக்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
அரசாங்கம் என்ற அடிப்படையில் கடந்த காலங்களில் மிக மோசமான பொருளாதார பிரச்சினை காரணமாக எங்களால் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தது.
நாம் நம்புகின்றோம், 2023 ,24 ஆம் ஆண்டுகளில் பயிர்களுக்கான நீர்ப்பாசன திட்டங்களையும் கிராமிய வீதிகளையும் செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க உள்ளோம்.
எல்லா வீதிகளையும் செய்து தருவேன் என்று என்னால் கூற முடியாது. எனது அமைச்சிலும் 10 மில்லியனுக்கு மேலான பணம் இருக்கின்றது. அதில் ஒரு மூன்று மில்லியன் ஆவது எமது மாவட்டத்தில் எதிர்வரும் காலங்களில் வேலை செய்வதற்காக எதிர்பார்த்து இருக்கின்றேன்.
நிச்சயமாக எமக்கு வாக்களித்தவர்கள் என்ற காரணத்தினால் தூய்மையான வேலைத் திட்டத்தை செய்து கொடுப்பேன்.
எனக்குத் தெரியும் விவசாயிகளுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றது. ஆகவே நாம் அனைவரும் அரசியலுக்கு அப்பால் ஒன்றுபட்டு மாவட்டத்திற்கான அபிவிருத்திக்காக உழைப்போம்” - என்றார்.
