முதன்முறையாக அரசியலில் குதிக்கும் நாமலின் மனைவி : அனுராதபுர பேரணியில் களமிறக்கம்
பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி வீரசிங்க ராஜபக்ச,எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுன நடத்தும் மாபெரும் பேரணியின் மேடையில் கலந்துகொள்ள உள்ளார் என கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிப்பதாக கொழும்பு ஊடகமொன்று தெகவல் வெளியிட்டுள்ளது.
நேற்று (04) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச, 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மகிந்தவும் பங்கேற்பு
கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவும் அனுராதபுர பேரணியில் கலந்துகொள்ள உள்ளார். ஆனால், அவர் பிரதான மேடையில் நின்று மக்களிடையே உரையாற்றுவதற்குப் பதிலாக, மேடைக்கு முன்னால் மக்களிடையே நின்றோ அல்லது மற்றொரு மேடையிலோ பேரணியில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்சியின் பிரதான மேடையில் லிமினி வீரசிங்க ராஜபக்ச முதன்முறையாக மக்களிடையே உரையாற்ற உள்ளார் எனத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
லிமினியின் ஜாதகத்தை கணித்த புகழ்பெற்ற சோதிடர்
மேலும், கடந்த காலத்தில் லிமினியின் ஜாதகத்தை ஆய்வு செய்த ஒரு புகழ்பெற்ற ஜோதிடர், அவரது ஜாதகமானது உலகின் முதல் பெண் பிரதமரான சிறிம ரத்வத்த டயஸ் பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் ஜாதகங்களைப் போல வலிமையானது என்று கூறியதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening