சர்வதேசத்தின் மிகப்பெரிய இலஞ்ச ஊழலில் நாமல்! கவனம் பெறும் பிரித்தானிய நீதிமன்ற அறிக்கை
சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கான விமானக் கொள்முதல் தொடர்பான ஏர்பஸ் இலஞ்ச விவகாரத்தில் பிரித்தானிய நீதிமன்றத்தில் வெளியான தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஏர்பஸ் நிறுவனம் சிறிலங்கா ஏர்லைன்ஸிடமிருந்து விமானங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக முறைகேடான முறையில் பணம் வழங்க முயன்றதாக பிரித்தானிய Serious Fraud Office (SFO) மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியிலேயே நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைதும் இடம்பெற்றது.
ஏர்பஸ் - Business Partner
2011 ஜூலை முதல் 2015 ஜூன் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டில், சிறிலங்கா ஏர்லைன்ஸின் விமானக் கொள்முதல் நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒருவரின் மனைவிக்கு சொந்தமான நிறுவனத்தை ஏர்பஸ் தனது Business Partner ஆக நியமித்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஏற்பாட்டின் மூலம், சிறிலங்கா ஏர்லைன்ஸுக்காக 10 ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்வதற்கும் மேலும் 4 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்கும் சாதகமான முடிவைப் பெறும் நோக்கில், அந்த Business Partner-க்கு மொத்தமாக 16.84 மில்லியன் அமெரிக்க டொலர் வரை வழங்க ஏர்பஸ் ஊழியர்கள் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்த தொகையில் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் மட்டுமே உண்மையில் செலுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2012ஆம் ஆண்டு புருனேயில் பதிவு செய்யப்பட்ட Biz Solutions Inc. என்ற நிறுவனத்தின் சிங்கப்பூர் வங்கி கணக்கிற்கு இந்தப் பணம் செலுத்தப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
Biz Solutions Inc. நிறுவனம் அப்போது சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா விஜேநாயக்கவுடன் தொடர்புடையதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
UKEF கேள்வி
மேலும், Business Partner-ன் உண்மையான பயனாளியை மறைப்பதற்காக ஏர்பஸ் ஊழியர்கள் UK Export Finance (UKEF) நிறுவனத்திற்கு தவறான அல்லது முழுமையற்ற தகவல்களை வழங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
குறித்த Business Partner-க்கு விமானத் துறையில் போதிய அனுபவம் இல்லாத நிலையிலும், அவரை ஏன் நியமித்தனர் என்பது தொடர்பாக UKEF கேள்வி எழுப்பியதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை தொடர்பான இந்த விவகாரம், ஏர்பஸ் நிறுவனத்துக்கு எதிராக பிரித்தானியாவின் Serious Fraud Office மேற்கொண்ட பரந்த அளவிலான ஊழல் விசாரணையின் ஒரு பகுதியாகும்.
பல நாடுகளில் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட முறைகேடுகள் தொடர்பாக, ஏர்பஸ் நிறுவனம் பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் மொத்தமாக சுமார் 3.6 பில்லியன் யூரோ தொகையை செலுத்த ஒப்புக்கொண்டது.
இந்த விவகாரம் தொடர்பாக இலங்கையிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
2020 பெப்ரவரி மாதத்தில் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா விஜேநாயக்க ஆகியோர் இலங்கையில் கைது செய்யப்பட்டனர்.
ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான இந்த விவகாரம், இலங்கை அரச நிறுவனங்களின் கொள்முதல் நடைமுறைகள், வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
மேலும், இந்த வழக்கு சர்வதேச அளவில் இடம்பெற்ற மிகப்பெரிய corporate bribery விசாரணைகளில் ஒன்றின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20