பாதாள உலகக் குழுக்களுக்கும் அரசியலுக்கும் இடையிலான பிணைப்பு

Chanrika Bandaranayake Kumarathuge Sri Lanka Sri Lanka Police Investigation
By Vanan Aug 12, 2022 11:00 AM GMT
Report

எப்படிப்பார்த்தாலும், எவர் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை அதிகாரத்தில் அமர்த்தியவர்களை ஒரு போதிலும் கைவிடுவதில்லை என்ற அரசியல் மரபு இலங்கையில் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது என்பதை, வரலாற்றை மீட்டிப் பார்க்கையில் தெளிவாகிவிடும். இலங்கையை பொருத்தவரையிலும் பாதாள உலகக் குழுக்களுக்கும் அரசியலுக்கும் இடையிலான பிணைப்பு என்பது கறுப்பு வெள்ளை காலம் முதலாகவே இருந்து வந்துள்ளது. அது எவ்வாறானது என்பதை சற்றே மீட்டிப்பார்ப்பதே கட்டுரையாளனாக என் நோக்கமே தவிர, இந்த வீணாய்போன அரசியலைப் பற்றி பேசுவது அல்ல என்பதையும் மேலோட்டமாக கூறிக்கொள்கிறேன்.

அடிக்கடி செய்திகளையும், சம்பவங்களையும் பார்த்து பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் இலங்கையில் அண்மைக்காலத்தில் தோன்றியதாக பலர் எண்ணக்கூடும். ஆனாலும் துப்பாக்கிகள் பெருமளவு இல்லாத அந்தப் பழங்காலத்திலிருந்தே இலங்கையில் இவ்வாறான பாதாள உலகமாக கூறப்படும் நபர்களில் அல்லது குழுக்களின் செயற்பாடுகள் காணப்பட்டு வந்தன. அப்போது அவர்கள் கிராமத்து சண்டியர்கள் (குண்டர்கள் ) என்ற பெயரிலேயே அடையாளப்படுத்தப்பட்டனரே தவிர மிரட்டும் இப்போதைய பெயரல்ல.

இருப்பினும், மற்றவர்கள் அவர்களுக்கு சவால் விடும்போது மாத்திரமே அவர்கள் தங்கள் இருப்பினை காட்டினர். அப்படித்தான் இந்த சண்டியர்கள் தத்தம் கிராமவாசிகளுக்குத் தங்களது சக்தியை, வீரத்தை காட்டினார்கள். 1960களின் இறுதியில் தொம்பேயைச் சேர்ந்த சீனா (Cheena), மருதானைச் சோப்பாய் (Choppay) , ஹார்பர் மார்ட்டின் (Harbour Martin), அங்கொனா சந்தரே (Aggona Chandare) மற்றும் திகா பியதாசா (Diga Piyadasa) போன்றவர்கள் கிராம மட்டங்களைத் தாண்டி நகர்ப்பகுதிகளில் தங்களது பராக்கிர செயற்பாடுகளை காட்டி பிரபல்யம் ஆயினர். நகர்ப்புறக் குண்டர்களாக இவர்கள் அறியப்பட்டனர்.

இலங்கையில் குண்டர்களின் செயற்பாடுகள்

 பாதாள உலகக் குழுக்களுக்கும் அரசியலுக்கும் இடையிலான பிணைப்பு | Link Between Underworld Groups And Sl Politics

இவர்களின் நகர்வுகளில் கிராமத்து குண்டர்களை பிற்காலத்தில் இலகுவில் பின் தள்ளினர். அதற்கு பல காரணங்கள் இருப்பினும் ஆயுதங்களின் மாற்றமும் முக்கியமாக காணப்பட்டது. கிராமத்து குண்டர்கள் அப்போதெல்லாம் தடிகள், கத்திகள், வாள்கள் போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இவர்களோ உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கச்சா துப்பாக்கிகள், டப்பி எனப்படும் எரிபொருள் மூலம் உருவாக்கப்படும் சிறிய கைக்குண்டுகள், சிறிய போத்தல்களில் உருவாக்கப்படும் கைக்குண்டுகள் போன்றவற்றை பயன்படுத்தினர்.

இப்படியாக படிப்படியாக இலங்கையில் குண்டர்களின் செயற்பாடுகள் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. கிராமம், நகரமாக மாறி மாகாணங்கள் அளவிலும் பிற குண்டர்கள் தோன்றினர். அவர்களில் அக்காலப்பகுதியில் பொலன்னறுவையை சேர்ந்த பொடி விஜே, தங்காலையைச் சேர்ந்த உக்குவா, மரதன்கடவல யகடய (யகடய என்றால் இரும்பு) மற்றும் அனுராதபுரத்தைச் சேர்ந்த சிறிபால மற்றும் மருசிரா (Maru Sira). போன்றவர்கள் பிரசித்தி பெற்றவர்களாக காணப்பட்டனர்.

என்றபோதிலும் கூட இவர்களை பற்றிய குறிப்புகளில் கற்பழிப்பு மற்றும் பாரிய அளவிளான கொள்ளைகள் போன்ற மனிதாபிமானமற்ற குற்றங்கள் செய்ததாக பதியப்பட்டு இல்லை. அந்தக்காலப்பகுதியில் குண்டராக அறியப்பட்ட சாஞ்சி ஆராச்சிச்சிகே ஜினதாச எனப்படுபவர் “ரொபின்ஹுட்” போன்றும் அடையாளப்படுத்தப்பட்டார். திருட்டுக் குற்றச்சாட்டு ஒன்றில் சிறையில் அடைக்கப்படதாகவும் சிறைக் கம்பிகளை வளைத்ததன் மூலமாகவே இவர் பின்பு யகடயா என்ற பெயர் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. இப்படி அப்போதைய குண்டர்கள் பாரிய குற்றங்களுடன் (வெளிப்படுத்தப்பட்ட அளவில்) தொடர்பு இல்லாதவர்களாக குறிப்பிடப்படுகின்றது.

அதன்பின்னர் இலங்கையில் அரசியல் கலாச்சாரத்துடன் குண்டர்கள் நேரடியான (ஒளிவு மறைவின்றி என்றும் கூறலாம்) இணையத் தொடங்கினர். இதுவே கீழ்த்தரமானதோர் அரசியல் பரிமாணத்திற்கான அடிகோளாகவும் அமைந்து போனது. 1977 ஜூலை 22 ஆம் திகதியன்று ஐக்கிய தேசிய கட்சியின் அமோக தேர்தல் வெற்றியுடன் இந்த கலாச்சாரம் ஆரம்பமானது என்று சம்பவங்கள் எடுத்துக் கூறுகின்றன.

இந்த அரசு, தேர்தலுக்குப் பிறகு எதிர்கட்சி அரசியல் போட்டியாளர்களை, இந்த குண்டர்களை கொண்டு, நகரங்களிலும் கிராமங்களிலும் தாக்க அனுமதித்தனர். இப்படியாகத்தான் வெறும் குண்டர்களாக இருந்தவர்கள் அச்சமற்ற பாதாள உலகத்தவராக மாற்றமடைந்தனர். குறித்த தேர்தல் காலப்பகுதியில் பொலிஸாரை விடுமுறைக்கு அனுப்புவதாக அப்போதைய அரசியல் தலைவர்கள் வெளிப்படையாக கூறியதையும் நினைவு படுத்தியாக வேண்டும்.

அரசு அடக்குமுறை செயற்பாடுகளுக்கும் அப்பால் சென்று , வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்காக இந்த குண்டர்கள் பயன்படுத்தப்பட்டனர். ஆளும் கட்சி குண்டர்கள், ஜே.வி.பி மற்றும் பிற எதிர்க்கட்சிகளின் கூட்டங்களை வெளிப்படையாக தாக்கியிருந்தனர். (அதற்காக ஏனைய அரசியல் கட்சிகள் நல்லவர்கள் என்றும் கூறவரவில்லை; யாவும் அரசியல்) இந்த அட்டகாசகாரர்களுக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட்டும் நேரடியாக குற்றங்களில் ஈடுபடவும் அனுமதிக்கப்பட்டனர்.

 ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட அனுமதி

பாதாள உலகக் குழுக்களுக்கும் அரசியலுக்கும் இடையிலான பிணைப்பு | Link Between Underworld Groups And Sl Politics

போதைப்பொருள் கடத்தல், மிரட்டி பணம் பறிக்கும் செயற்பாடுகள் அதாவது கட்டப்பஞ்சாயத்து என்று கூறுவார்களே அதுபோன்ற செயற்பாடுகள் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் இப்படி பிரதான குற்றங்களில் ஈடுபட அப்போதைய அரசியல் மற்றும் பிரபுக்களின் பின்புல பலம் பிரதானமாக காணப்பட்டது. இந்த அனைத்து குற்றங்களையும் தாண்டி ஒப்பந்த அடிப்படையிலான கொலைகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களின் முக்கிய வருமான ஆதாரம் போதைபொருளாக அமைந்தது. முக்கியமாக இவர்களுக்கு அச்சமற்ற தன்மையையும், வாகனங்களையும், ஆயுதங்களையும் வழங்கி ஊக்குவித்த செயற்பாடுகளை அப்போதைய அரசியல் தரப்பினர் வெளிப்படையாக செய்து வந்தனர். அரசாங்கம் கூட தனது செலவில் இவற்றையும் உள்ளடக்கியது என்பது இவர்களின் அட்டகாச வளர்ச்சியோடு ஒப்பிட்டு பார்க்கையில் தெளிவாக தெரிந்து விடும். இனி இவர்கள் குண்டர்கள் என்ற இடத்தில் இருந்து பாதாள உலகக்குழுவாக வெற்றிகரமாக வெளிப்படையாக வளர்ச்சியடைந்தனர் அதாவது பதவி உயர்த்தப்பட்டனர்.

அப்போது ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் பாதுகாப்பில் கோனவல சுனில், சொத்தி உபாலி, கடுவெல வசந்த, நாவல நிஹால், நோயல் அமரசிங்க போன்ற பாதாள உலகக் கதாபாத்திரங்கள் தமது பலத்தை காட்டியது மட்டுமில்லாமல் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சியானது நாட்டைப் பீடித்திருந்தபோது, பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில், ஜெயவர்தனவால், அரசியல் மயப்படுத்தப்பட்ட பாதாள உலகத்தைப் வெற்றிகரமாக பிறப்பித்த அதேவேளை அதன் சக்தி உச்சக்கட்டத்தை எட்ட வழிவகுத்தது. மேலும், சந்திரிக்கா குமாரதுங்கவின் அதிகாரத்தின், கீழும் குண்டர்கள் (பாதாளர்கள்) அரச அனுசரணையை நேரடியாக பெற்று மிகவும் இழிவான மற்றும் கொடூரமான செயல்களை செய்து வளர்ந்து வர ஆரம்பித்தார்கள்.

பிரேமதாசாவின் காலகட்டத்தில், கொழும்பு பாதாள உலக உறுப்பினர்களின் மறைமுக கையாக (உதவியாளராக) இருந்தவர், அமைச்சர் கூரே. மேலும் பிரேமதாசவின் ஆட்சியில்தான், முன்னணி பாதாள உலக உறுப்பினர், ரஞ்சித் அல்லது சொத்தி உபாலி அல்லது பிடலி உபாலி என அறியப்படும் நபர் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.

பொரளையில் உள்ள தலைமை போலீஸ் அதிகாரியின் இருக்கையில் இவர் அமர்ந்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் உண்டு. இது தவிர பல கொலைகளுடனும் இவருக்கு நேரடித் தொடர்புகள் இருந்தபோதும் பொலிஸ் நிலையங்களில் குற்றச்சாட்டுகள் எழுதப்பட்டிருந்தபோதும் அவை எதுவும் கண்டுகொள்ளப்படவில்லை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவுமில்லை.

அரசியல் பின்புலத்தில் உள்ள நேரடித் தொடர்பு

பாதாள உலகக் குழுக்களுக்கும் அரசியலுக்கும் இடையிலான பிணைப்பு | Link Between Underworld Groups And Sl Politics

1989 ஆம் ஆண்டு இரண்டாவது ஜே.வி.பி கிளர்ச்சியின் போது பிரேமதாச ஆட்சியில் இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பில் சிங்கள நாளிதழான “எத்த” வில் யூனுஸ் என்பவர் கார்ட்டூன்களை வரைந்ததால் அவரது வீட்டிற்கே சென்ற சொத்தி உபாலி அவரது வாயின் பக்கத்தை பிளேடால் அறுத்ததாகவும் துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. இதுதவிர லலித் அத்துலத்முதலி படுகொலை வழக்கில் கூட சொத்தி உபாலி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் யூ.எல். செனவிரத்ன போன்றோருக்கு தொடர்புகள் உண்டென்ற சந்தேகங்கள் வெளிப்படையானதே.

1980 ஜூலையில் பொது மற்றும் தனியார் துறைகள் இணைந்து நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமானது அக்காலத்தில், நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை பாதாள உலக நபர்களின் உதவியுடன் நசுக்க பார்த்துள்ளனர். சம்பள உயர்விற்காய் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை மற்றும் லேக் ஹவுஸ் ஆகிய இடங்களில் (அரச வழங்கல், சேவைகள் அலுவலகத்தின் திசையிலிருந்து) வெளிப்பட்ட இரண்டு ஆயுதக் கும்பல்கள் போராட்டக்காரர்களை கற்களால் தாக்கி ஆர்ப்பாட்டத்தை சிதைத்துள்ளனர். இந்த கும்பல்களில் பாதாள உலகக் கும்பலில் அளுத்கடே பாலாவும் அடங்குவார்.

இந்த சம்பவத்திற்கும் அரசியல் பின்புலத்திற்கும் உள்ள நேரடித் தொடர்பை இங்கு கூட்டிக்காட்ட வேண்டிய அவசியம் உள்ளது. அதே ஆர்ப்பாட்ட தருணத்தில் ஜீப் வண்டி ஒன்றில் ( வாகன இலக்கம் எண்.31 ஸ்ரீ 1111), கொத்தளத்தீவு பகுதியில் இருந்து வந்த ஒரு கும்பல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடிகளாலும், கற்களாலும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். துப்பாக்கித் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளது கலவரத்தில் பலர் காயமடைந்தும் உள்ளனர். இதன்போது சம்பவ இடத்தை கடந்த அதே ஜீப் வண்டியின் முன் இருக்கையில் அகலவத்தை பாராளுமன்ற உறுப்பினர் மெரில் காரியவசம் அமர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அரச ஊழியரான தெட்டுவாகே சோமபால என்பவர் இந்த கலவர சம்பவத்தில் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இச் சம்பவம் பாதாள உலகத்திற்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பை விளக்குகின்றது.

1978 ஆம் ஆண்டு தொடக்கம் களனிப் பல்கலைக்கழகத்தின் இடதுசாரிகள் மற்றும் ஏனைய ஐ.தே.க விரோத மாணவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபர்கள் ஐ.தே.க அமைச்சர் சிறில் மத்யூ தலைமையிலான கொனவல சுனிலின் கைக்கூலிகள் . 1973 இல் களனிப் பல்கலைக்கழகத்தில் முதன்முதலில் ஸ்தாபிக்கப்பட்ட ஐ.தே.க இற்கு ஆதரவான எக்சத் சமவாதி மாணவர் முன்னணியினால் இந்த நபர்கள் ஆதரவளிக்கபட்டனர். இந்த மாணவர்கள் 1978 முதல் 1984 வரை களனி மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகங்களில் உத்தியோகபூர்வமற்ற முறையில் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஜயவர்தனபுர பல்கலைக்கழக துணைவேந்தர் கருணாசேன கொடித்துவக்குவினால், பல்கலைக்கழக காவலாளிகளாக நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு பட்டவர்களும் உறுப்பினர்களும் ஆவர். இவர்களால் அரசாங்கத்தை எதிர்க்கும், அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் மாணவர்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தொடர்ந்தும் தாக்கப்பட்டு வந்தனர்.

பாதாள உலகத்தை வழிநடத்தியது யார்?

பாதாள உலகக் குழுக்களுக்கும் அரசியலுக்கும் இடையிலான பிணைப்பு | Link Between Underworld Groups And Sl Politics

மார்ச் 16, 1978 அன்று களனிப் பல்கலைக்கழகத்தில் ஆயுதங்களுடன் வந்த சுமார் 40 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் ஐ.தே.க விற்கு ஆதரவான சமவாதி மாணவர் முன்னணியினரால் தூண்டப்பட்டிருக்கின்றனர், இந்த நடவடிக்கையில் முன்னணி தாக்குதல்காரர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் ஜயதிலக கொல்லப்பட்டுள்ளார். மேலும் மார்ச் 18, 1978 இல் நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களில் பிரதானமான ஒருவர் ஜெயவர்த்தன என்பதையும் செய்திகள் இன்றும் மறக்கவில்லை.

1986 ஆம் ஆண்டின் இறுதி வரை, கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு வெளியே மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களின் போது, சைக்கிள் சங்கிலி போன்ற ஆயுதங்களை ஏந்திய நபர்கள் பொலிஸாருடன் ஒன்றாகக் காணப்பட்டனர். சமவாதி மாணவர் முன்னணியின் தலைவர்களான கயகாந்த வன்னிகம மற்றும் விமல் ரஞ்சித் விக்கிரமாராச்சி ஆகியோர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்ட ஜயரத்ன ராஜபக்சவின் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டனர். இந்த கொலைச் சம்பவத்தின் சாட்சிகளான அமரசிறி குருசிங்க மற்றும் எம். குனதாச ஆகியோர், பின்னர் 1988 இல் ஜே.வி.பி கிளர்ச்சியின் போது பாதாள உலக குழுக்களால் கடத்தப்பட்டனர். அதன்பின்னர் பாதிக்கப்பட்ட இந்த இருவரை பற்றி, எந்த செய்தியும் கிடைக்கவில்லை ஒரு மறைக்கப்பட்ட வேதனையே.

ஐ.தே.க ஆட்சியுடன் தொடர்புடைய பாதாள உலகத்தை வழிநடத்தியவர்களில் கொனவல சுனில், நாவல நிஹால் மற்றும் கடுவெல வசந்த ஆகியோர் அடங்குவர். ஒரு காலத்தில் கடுவெல வசந்தவுக்கு எதிராக கடுமையான அச்சுறுத்தல்கள் இருந்தபோது, கொழும்பு கறுவாத்தோட்டம் பந்தய மைதானத்தில் உள்ள சித்திரவதை அறைக்கு அடுத்துள்ள ஒரு வசதியான அறையில் அவருக்கு மேஜர் பத்மசிறி உடுகம்பொலவால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சொத்தி உபாலி, ராஜகிரியவைச் சேர்ந்த அனில் மற்றும் கொஹொல்வல டென்சில் ஆகியோர் அடிக்கடி ஐக்கிய தேசிய கட்சியின் போல் பெரேராவின் வீட்டில் தங்கியிருக்கின்றனர். கொனவல சுனிலின் சகோதரர் ஷெல்டன் பெரேராவின் கூற்றுப்படி ஐ.தே.க அமைச்சர் பால் பெரேரா, கம்பஹா பாதாள உலகக் குழுவின் மறைமுக தலைவராகவும் இருந்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தின் சபுகஸ்கந்த, படலந்தாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதியின் வலது கரமாக செயற்பட்டவர் களனியைச் சேர்ந்த கோனவல சுனில் எனப்படும் சுனில் பெரேரா. சுனில் 1988 ஆம் ஆண்டு இறக்கும் வரை படலந்தா வளாகத்தில் உள்ள சித்திரவதை அறைக்கு அடுத்துள்ள ஒரு வீட்டை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கின்றார் என்பதும் மேலதிக தகவல்.

குறித்த அந்த செல்வாக்கு மிக்க அரசியல்வாதியை அடிக்கடி பார்க்க வந்தவர்களில் கொனவல சுனிலும் பிரதானமாக அடங்குவதாக படலந்த சுற்றுலா பங்களாவின் பராமரிப்பாளர் வின்சென்ட் பெரேரா படலந்த என்பவர் ஒரு விசாரணையின் போது கூறியிருக்கின்றார். பாவம் அவர் அவ்விதம் சாட்சியம் கூறியதன் பின்னர் மர்மமான முறையில் காணாமலேயே போய்விட்டார்.

கோனாவல சுனில் எனப்படும் முக்கிய நபருக்கு ஏழு சகோதரர்கள். பியதாசா, சாமி, ஹரோல்ட், வின்சென்ட், சிரில், ஷெல்டன் மற்றும் டியூடர். கொனவல பெரேரா குடும்பமானது ஐக்கிய தேசியக் கட்சிக்கு தீவிர ஆதரவளிப்பதற்காக நன்கு அறியப்பட்டதாகும். இவர்களின் அப்பா ரெண்டே முதலாலலி ஆவார். குணவல சுனில் ஐ.தே.க.வின் மாகாண முன்னணி செயற்பாட்டாளராகப் பணியாற்றியதோடு, பல ஐ.தே.க தலைவர்களுடன் நீண்டகாலம் தொடர்பு கொண்டிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இலங்கை திரும்பும் போதெல்லாம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர்களை வரவேற்பது வழக்கமாக கொண்டிருந்ததோடு, கட்சியின் சிறிய குழுக் கூட்டங்களுக்கு அவரது வீடு தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டும் வந்துள்ளது.

கட்டான இடைத்தேர்தலில் ஐ.தே.க சார்பில் வாக்குப்பெட்டிகளை திருடியதாகவும், பொலிஸ் உயர் அதிகாரியின் நாற்காலியில் அமர்ந்து பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்ததாகவும் சுனில் மீது குற்றச்சாட்டுகள் காணப்பட்டன. முல்கிரிகல இடைத்தேர்தலில் அரசாங்கத்தின் முன்னணி கைக்கூலியாகவும் குணவல சுனில் செயற்பட்டுவந்துள்ளார். கம்பஹா தெல்கொடவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்ற வந்த ரோஹன விஜேவீர மற்றும் ஏனைய ஜே.வி.பி உறுப்பினர்களை தாக்கி மற்றும் விஜேவீரவுக்கு பச்சை சாயம் பூச அவர் முயற்சித்த போதிலும் ஜே.வி.பி எதிர் தாக்குதல் நடத்தியதால் அது முறியடிக்கப்பட்டதாகவும் சம்பவங்கள் ஏராளமானவற்றை அடுக்கிக் கூறமுடியும்.

அரசியல் அடியாட்களாக அல்லது கைக்கூலியாக செயற்பட்ட விதம்

பாதாள உலகக் குழுக்களுக்கும் அரசியலுக்கும் இடையிலான பிணைப்பு | Link Between Underworld Groups And Sl Politics

கொனவல சுனில் அரசியல் அடியாளாக அல்லது கைக்கூலியாக இருந்தது மட்டுமல்லாமல் பல்வேறு குற்றங்களுடன் தொடர்பு பட்ட ஒரு முக்கியமானவர்.இந்த கீழ்த்தரமிக்க நபரின் முக்கிய குற்றம் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தண்டனை உறுதி செய்யப்பட்டு 15 வருடங்கள் சிறை உறுதியான பின்னரும் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் மூலம் ஜனாதிபதி பொதுமன்னிப்பு கிடைத்தது ஒன்றும் அந்த காலகட்டத்திலும் சரி இப்போதும் சரி அதிசயத்தக்க விடயமல்ல. இவற்றையும் தாண்டி அதற்கு பின்னரும் அரச தரப்பில் உயர் பதவிகளும் இவருக்கு வழங்கப்பட்டு இருந்தன. முக்கியமாக அப்போது ரணிலின் மெய்க்காவளராகவும் இவர் சிறப்பான கைக்கூலியாக மன்னிக்கவும் பணிகளை ஆற்றினார் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

கொனவல சுனிலுக்கு அப்போதைய அரசாங்கத்தின் ஆசிகள் வெளிப்படையாகவே இருந்தன. அவரது சகோதரர் ஷெல்டன், புஷ்பா ரஞ்சனியை மணந்தார், இந்த புஷ்பா ரஞ்சனியே, எண்ணெய் விநியோக மோசடியில் அவரது மேலாளராக இருந்தார். இவர் ஜூலை 26, 1989 இல் கொல்லப்பட்டார். அதற்கு முந்தைய ஆண்டு, ஜூலை 25, 1988 அன்று கொனவல சுனில் மற்றும் அவரது மனைவி துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

குறிப்பாக இந்த அப்போதைய பலம்பொருந்திய சுனிலைக் கொன்றவர், முன்னாள் இராணுவ வீரர் பிரசாத் என்பவர் என்றும் அவர், பின்னர் ஜே.வி.பியில் இணைந்து கிழக்கு கண்டி பிராந்தியத்தில் அதன் ஆயுதப் பிரிவின் தலைவராக ஆனார் என்றும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் இவர் அப்போது ஜே.வி.பி தரப்பிற்கு ஆயுதப்பயிற்சிகளையும் அளித்து வந்துள்ளார் என்னதான் செய்தபோதும் கடைசியில் இவர் கொல்லப்பட்டு கண்டி கட்டுகஸ்தோட்டை பாலத்திற்கு அருகில் சடலமாக வீசப்பட்டார்.

இப்படியான சம்பவங்களை கூறிக்கொண்டு வருகையில் அப்போது ஒரு பொலிஸ் அதிகாரி கூட இவற்றை எதிர்க்கவில்லையா? நியாயமாக நடந்து கொள்ள வில்லையா என்ற கேள்விகள் மேலெழுவது சாத்தியமே. ஆம் அப்போதும் இந்த அரசியல் சாக்கடைகளைத் தாண்டி ஒரு பொலிஸ் அதிகாரி செயற்பட்டார் சபுகஸ்கந்த பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, ரோஹித பிரியதர்ஷனவே அது.

இவர் களனியில் பாதாள உலக செயற்பாடுகளை அடக்குவதற்கு அச்சமின்றி செயற்பட்டவராக நோக்கப்பட்டார். 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி காலை 8.30 மணியளவில் கடமையாற்றிய போது, சபுகஸ்கந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கீர்த்தி அத்தபத்துவிடம் இருந்து, பியகம விலேஜ் என்ற உணவகத்திற்கு வருமாறு ரோஹித பிரியதர்ஷன விற்கு தொலைபேசி மூலம் அழைப்பு வந்துள்ளது.

நேரடி மறைமுக தொடர்புகள்

பாதாள உலகக் குழுக்களுக்கும் அரசியலுக்கும் இடையிலான பிணைப்பு | Link Between Underworld Groups And Sl Politics

ஆனால் குறித்த இடத்தை அடைந்ததும் பிரியதர்ஷன காணாமல் சென்றுள்ளார். அதன்பின்னர் 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி 23 ஆம் திகதி பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள களனி ஆற்றில் அவர் மட்டுமல்லாது அவருடன் சேர்ந்து ஐந்து சடலங்கள் மிதந்துள்ளன. இந்த சம்பவம் அப்போது பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒன்றாகவும் அமைந்தது. இவரது கொலைக்கான காரணம் பாதாள உலகக் குழுக்களை சீண்டிப்பார்த்த ஒன்றாக அமைந்ததோடு, கொனவல சுனிலின் சகோதரரான டியூடர் பெரேராவை கைது செய்ததும் ஆகும். இந்த கொலைக்கு சக்தி வாய்ந்த ஒரு முக்கிய அரசியல்வாதியும் காரணம் அவரது ஆணைப்படியே இவை அரங்கேற்றப்பட்டது எனவும் கூறலாம்.

இப்படியான பின்னணியில் சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சி காலகட்டத்தில் பாதாள உலகம் மற்றும் அது சார் செயற்பாடுகள் பாரிய அளவில் வலுவடைந்தது. அதன் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் (PSD) பத்தேகனே சஞ்சீவ ஆவார். 1999 செப்டெம்பர் 7ஆம் திகதி 'சதன' பத்திரிகையின் ஆசிரியரான ஊடகவியலாளர் ரோஹன குமாரவை சுட்டுக் கொன்ற வீரச் செயலும் இவரயே சாரும். செனல் 9 விவகாரத்தை அவர் தனது பத்திரிக்கையில் அம்பலப்படுத்தியதே அந்த கொலைத் துப்பாக்கிச் சூட்டுக்குக் கூறப்படும் பிரதான காரணமாக அமைகிறது. இது தவிர ஏராள குற்றச் செயல்களுக்கும் இவருக்கும் நேரடி மறைமுக தொடர்புகள் உண்டு.

2000 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி மத்தேகொடையில் உள்ள பிரபல பாடகர்களான ரூகாந்த குணதிலக மற்றும் அவரது மனைவி சந்திரலேகா பெரேரா ஆகியோரின் வீட்டிற்கு வலுக்கட்டாயமாக நுழைந்து சந்திரலேகாவின் தலைமுடியை வெட்டி உடலில் பெட்ரோல் ஊற்றி அவர்களை மிரட்டிய சம்பவத்திற்கும் பத்தேகனே சஞ்சீவ தலைமை தாங்கினார். இந்த குழுவில் (PSD) ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்களே அதிகளவில் இருந்தனர். அதன் பின்னர் பத்தேகனே சஞ்சீவ 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி தம்மிக்க பெரேராவினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பின்னர் அதற்கு பலிவாங்கல் செயற்பாடாக தம்மிக்க பெரேரா, 2004 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குள் ஏனைய பாதாள உலகக் கும்பல்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு நீண்ட பட்டியலை கூறுகின்றேன் மூச்சை பிடித்துக் கொண்டு படித்துவிடுங்கள்... கொனவல சுனில், சொத்தி உபாலி, கடுவெல வசந்த, நாவல நிஹால், நோயல் அமரசிங்க, தம்மிக்க அமரசிங்க, வம்பொட்ட, சிந்தக அமரசிங்க, பத்தேகனே சஞ்சீவ, துன்முல்லே பத்மே, தோப்பி சமிந்த, களுத்தோ அஜீத், ஆனமாலு இமிதியாஸ், மொரட்டு சமன், தெமட்டகொட கமல், கிம்புல எலவின் குணா, தெல் பாலா, பிரின்ஸ் கோலம், தனுஷ்க, நேவி ருவான், நேவி அசங்க, கராத்தே தம்மிக்க, ஐஸ் மஞ்சு, நெலுவே பிரியந்த, ஆர்மி ரோஷன், மாமா அஸ்மி, நடராஜ், உசா குமார உள்ளிட்ட பலர் இலங்கையை ஆட்டிப்படைத்தே வந்தனர்.

இவர்களில் பலரின் சகாக்கள் இன்றும் கூட பாதாள உலகக்குழுக்களுடன் தொடர்பு பட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் உண்மைதான். அண்மையில் பாதாள உலகக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர் மாக்கந்துரே மதுஷ் என்பவரையும் குறிப்பாக கூறமுடியும். அவரது கொலையும் கூட ஒரு நாடகம் என்ற வகையிலேயே இன்றும் சந்தேகங்கள் உண்டு.

அன்றும் சரி இன்றும் சரி பாதாள உலகக் குழு என்பது சக்திமிக்க பிரபுக்களின் அல்லது அரசியல்வாதிகளின் பின்புலத்தின் அடிப்படையிலேயே இயங்கியும் வளர்ந்தும் வந்துள்ளன. அதாவது அரசியல் நிலைத்து இருக்க வேண்டும் எனின் இவர்களது தேவைகளும் அவசியம். அதற்கு மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் உதாரணம். அதேபோன்று ஏன் பாதாள உலகக் குழு என்பதை முற்று முழுதாக அழிக்க முடியவில்லை என்பதற்கும் அவர்களை ஆட்டிப்படைப்பது அல்லது அவர்களை இயக்கி வருவது யார் என்பதற்கும் இவை எடுத்துக்காட்டாகும். இதற்கு அன்றும் சரி இன்றும் சரி அரசியல்வாதிகள் மட்டுமே பிரதான மூளையாக செயற்பட்டு வருகின்றனர் என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.      

ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, Toronto, Canada

15 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021