மதுபானசாலை அனுமதிப் பத்திர விவகாரம் : நாடாளுமன்றில் சாணக்கியன் கேள்வி
மதுபானசாலை அனுமதி பத்திரங்களுடன் தொடர்புடைய விசாரணைகள் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (R.Shanakiyan) தெரிவித்துள்ளார்.
மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகிறதா எனவும் அவர் சபாநாயகரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்றைய (05) நாடாளுமன்ற அமர்வில் கருத்துரைத்த போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகளை மேற்கொள்ளல்
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”அண்மையில் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் விபரங்கள் நேற்று (04) வெளியிடப்பட்டன. எனினும் அதற்குப் பின்னால் உள்ள அரசியல் தலைவர்களின் பெயர்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகிறதா? குறித்த விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களமா (CID) அல்லது காவல்துறையா மேற்கொள்கிறது?
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் மாத்திரம் 18 மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் காணப்படுகின்றனர்.
5000 பேருக்கு ஒரு மதுபானசாலை
ஆகவே 5000 வாக்காளர்களுக்கு ஒரு மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே இவ்வாறு வழங்கப்பட்டுள்ள மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்துள்ளீர்களா? இல்லையா? என்பதற்கான பதிலை கூற வேண்டும்.
அவ்வாறு இரத்து செய்யாதுவிடின் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை உடன் இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நேற்றைய தினம் இந்த விடயத்தைப்பற்றி கேட்குமாறு மக்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். ஆகவே இது இது பற்றி விளக்கமளிக்கப்பட வேண்டும்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |