மன்னாரில் தொடரும் சட்டவிரோத செயற்பாடுகள் : துணிந்து களமிறங்கிய இளைஞர்கள்
மன்னார் - மாந்தை பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி இடம்பெறும் இடத்தை காவல்துறையினரின் உதவியுடன் இளைஞர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காய நகர் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஈச்சளவக்கை கிராமத்தின் காட்டுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் காவல்துறை மா அதிபரின் சிந்தனைக்கு அமைய நேற்று (31) மாலை விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேடுதல் நடவடிக்கை
இதில், ஈச்சளவக்கை கிராமத்தின் மருதம் விளையாட்டு கழகத்தின் ஆறு பேர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவரும் இணைந்து நேற்று மாலை அப்பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யும் குளத்தின் வாய்க்கால் பகுதியில் இறங்கி தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன் போது கசிப்பு உற்பத்தியாளர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர், இதனால் கசிப்பு பரல் இரவாகியும் அவ்விடத்தில் இருந்த நிலையில் குறித்த குழுவினரால் மீட்கப்பட்ட சட்டவிரோத மதுபானங்கள் அடம்பன் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவ்விடத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபடும் இருவர் தாம் தொடர்ந்தும் சட்டவிரோத மது உற்பத்தியை முன்னெடுக்க உள்ளதாகவும் பிடிக்க முடிந்தால் பிடித்து பார்க்கட்டும், என்றும் பிடித்து கொடுத்தவர்களை தாக்குவோம் என்றும் எச்சரித்துள்ளனர்.
சட்டவிரோத செயற்பாடுகள்
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக அடம்பன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமையினால் இளைஞர்கள், சிறுவர்கள் பாடசாலை செல்லாது கசிப்புக்கு அடிமையாக உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |