ஆடம்பர நகரங்களின் பட்டியல் - பின்தள்ளப்பட்ட லண்டன்..! முதலிடம் எந்த நாடு தெரியுமா
ஆடம்பர வாழ்க்கைக்கு, அதிக செலவுமிக்க நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜோலியஸ் பெர் என்பவரின் லைப்ஸ்டைல் இண்டக்ஸ் என்ற நிறுவனம், உலகில் உள்ள ஆடம்பர வாழ்க்கைக்கான அதிக செலவுமிக்க நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், வதிவிட சொத்துக்கள், மகிழுந்துகள், வணிக விமான பயணங்கள், வர்த்தக கல்லூரிகள் மற்றும் ஆடம்பர வசதிகளுடன் கூடிய இடங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து 25 நகரங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
லண்டன் - நியுயோர்க் நகரங்கள்
இந்த பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த நகரம் 5 ஆவது இடத்தில் இருந்தது.
2 ஆவது மற்றும் 3 ஆவது இடத்தில் முறையே, சீனாவின் ஷாங்காய் மற்றும் ஹாங்காங் நகரங்கள் உள்ளன.
கடந்த ஆண்டு 2 ஆவது இடத்தில் இருந்த பிரிட்டன் தலைநகர் லண்டன் இந்த ஆண்டு 4 ஆவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்தாண்டு 11 ஆவது இடத்தில் இருந்த அமெரிக்காவின் நியுயோர்க் நகரம் இந்தாண்டு 5 ஆவது இடத்துக்கு வந்துள்ளது.
முதல் 15 நகரங்கள்
தொடர்ந்து குறித்த பட்டியலில் 6 ஆவது இடத்தில் மொனாகோவும், 7 ஆவது இடத்தில் ஐக்கிய அரபு எமீரேட்சின் துபாயும், 8 ஆவது இடத்தில் தைவான் தலைநகர் தைபேயும், 9 ஆவது இடத்தில் பிரேசிலின் சா பாலோவும், 10 ஆவது இடத்தில் அமெரிக்காவின் மியாமியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, 11 ஆவது இடத்தில் தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கும், 12 ஆவது இடத்தில் இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவும், 13 ஆவது இடத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீசும், 14 ஆவது இடத்தில் சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சும், 15 ஆவது இடத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவும் பிடித்துள்ளன.
