விலை அதிகரிப்பு மற்றும் விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!!
விலை அதிகரிக்கப்படாது
எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எரிவாயு விலை திருத்தம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை வரை எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது
இதேவேளை, 12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம் எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் புதன்கிழமை(8) வரை விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கையிருப்பில் போதியளவு சமையல் எரிவாயு இல்லாமையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்ய மக்களை வரிசையில் நிற்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
2000 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்றையதினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில், அவற்றை தரையிறக்கும்செயற்பாடுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
