இலங்கையில் ஒரு எழுத்தாளராக வாழ்வது என்பது மிகவும் போராட்டமானது…!

Sri Lankan Tamils Sri Lanka Sri Lankan Peoples
By Theepachelvan Mar 05, 2026 04:20 PM GMT
Report
Courtesy: தீபச்செல்வன்

இலங்கை போன்ற ஒரு நாட்டில் உண்மையை எழுதுகின்ற எழுத்தாளராக வாழ்வது என்பது சாதாரணவிடயமல்ல. மிகவும் போராட்டமானது. இலங்கையை விட்டுப் பல எழுத்தாளர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள் என்பதும் இலங்கையில் பல எழுத்தாளர்கள் தமது உயிரை தியாகம் செய்தார்கள் என்பதும் நாம் கடந்து வந்த கசப்பான வரலாற்றின் பக்கங்கள். இந்த நாட்டில் இன்றுவரை அச்சத்துடனும் மௌனத்துடனும் பல எழுத்தாளர்கள் வாழ்ந்துகொண்டுதான் உள்ளனர்.

சர்வதேச எழுத்தாளர் தினம்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச எழுத்தாளர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மனிதகுலத்தின் சிந்தனை வரலாற்றை வடிவமைத்தவர்களாகிய எழுத்தாளர்களின் பங்களிப்பை நினைவுகூரும் நாளாக இது திகழ்கிறது. கற்பனைக்கு எல்லை இல்லை. ஆனால் அந்தக் கற்பனை காகிதத்தில் உயிர் பெறுவதற்கு அவசியமானது சுதந்திரம். சுதந்திரமற்ற சூழலில் எழுத்து உயிர்வாழ முடியாது. உலகில் எழுத்தாளர்களின், சிந்தனையாளர்களின் கற்பனைகளில் இருந்து உலகிற்கான பல கண்டுபிடிப்புக்களும் புரட்சிக்கான விதைகளும் உருவாக்கப்பட்டுள்ளன என்பது பெரும் பாடமாகும்.

எழுத்தாளன் வெறும் கதைசொல்லியல்ல. சமூகத்தின் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் சாட்சி. அரசியல் தவறுகள், இன அநீதிகள், சமூக ஒடுக்குமுறைகள், ஏற்றத் தொழ்வு, சமத்துவப் பிரச்சினைகள், போர் மற்றும் அமைதி என்பவற்றைக் குறித்து சிந்திக்கவும் சிந்திக்கச் செய்யவும் எழுத்தாளர்களே முன்னிலை வகிக்கிறார்கள். எனவே, உலகின் ஒவ்வொரு அரசும் எழுத்தாளர்களின் கற்பனைக்கும், விமர்சன சிந்தனைக்கும் உரிய இடத்தை வழங்குவது ஜனநாயகத்தின் அடிப்படைச் செயற்பாடாகும்.

எழுத்தின் விலை

இலங்கை வரலாற்றில் எழுத்தாளராக இருப்பது பல நேரங்களில் ஆபத்தான தேர்வாகவே இருந்துள்ளது. குறிப்பாக உள்நாட்டுப் போர் காலத்திலும் அதன்பிறகும், இலங்கை அரசை எதிர்த்த பல எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகினர்.

உதாரணமாக, லசந்த விக்கிரமதுங்க தனது ஆசிரியர் கட்டுரைகளில் அதிகார துஷ்பிரயோகங்களை வெளிப்படையாக விமர்சித்ததற்காக 2009 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அதேபோல் தராகி சிவராம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் நாட்டின் ஊடக சுதந்திர வரலாற்றில் கரும்புள்ளியாக உள்ளது. இவை வெறும் தனிப்பட்ட தாக்குதல்களல்ல. எழுத்தையும் படைப்பாக்கத்தையும் கருத்தையும் மௌனப்படுத்தும் முயற்சிகளாகப் பார்க்கப்படுகின்றன.

பல தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள் வலிந்த நாடு கடத்தலுக்கோ, புலம்பெயர்வுக்கோ, தற்காலிக மௌனத்துக்கோ தள்ளப்பட்டனர். சிலர் தங்கள் பெயரைக் கூட வெளிப்படுத்தாமல் எழுத வேண்டிய சூழ்நிலையை எதிர்கொண்டனர். எழுத்து என்பது உயிர் அபாயத்துடன் கூடிய செயலாக மாறிய காலத்தில் முகத்தை மறைத்தும் சில சமயத்தில் மௌனித்தும் கொண்டனர் எழுத்தாளர்கள்.

கற்பனைமீதான அச்சுறுத்தல்

ஒரு எழுத்தாளரின் கற்பனை சமூகத்தின் குரல்களோடு இணைந்தே வளர்கிறது. ஆனால் அச்சம் நிரம்பிய சூழலில் கற்பனை சுருங்கிவிடும் அபாயம் உள்ளது. தன்னைச் சுற்றி கண்காணிப்பு, விசாரணை, சட்டத்தின் பெயரில் அழுத்தம் ஆகியவை இருக்கும் போது எழுத்து இயல்பாகப் பாயாது.இலங்கையில் பல காலகட்டங்களில் அவசர சட்டங்கள், பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் போன்றவை கருத்து வெளிப்பாட்டை மறைமுகமாக கட்டுப்படுத்த முயல்கின்றன. சட்டம் பாதுகாப்பிற்கான கருவி என்ற பெயரில் சிந்தனையை கட்டுப்படுத்தும் கருவியாக மாறினால் ஜனநாயகத்தின் உயிரே சுருங்கிவிடும்.

எழுத்தாளர்களை பாதுகாப்பது ஒரு அரசின் மனித உரிமை பொறுப்பாகும். விமர்சனக் குரலை எதிரியாகப் பார்க்கும் அரசியல் மனப்பான்மை மாற்றப்பட வேண்டும். எதிர்மறை கருத்துக்களே ஜனநாயகத்தை வலுப்படுத்துகின்றன. உலக நாடுகள் அனைத்தும் கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்யும் சர்வதேச உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் நடைமுறையில் அவை முழுமையாக அமல்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஒரு எழுத்தாளர் அச்சமின்றி எழுத முடியும் சூழல் உருவாக்கப்படாவிட்டால், அந்த நாடு உண்மையான ஜனநாயகமாக தன்னை அழைக்க முடியாது.

எழுத்தில் எதிர்ப்பும் நம்பிக்கையும்

இலங்கையில் எழுத்தாளராக வாழ்வது சவாலானதாய் இருந்தாலும், அது நம்பிக்கையற்றதல்ல. ஒடுக்குமுறைகள் இருந்தபோதிலும் பலர் எழுதத் தளரவில்லை. கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள், நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றின் மூலம் போரின் வலி, காணாமல் ஆக்கப்பட்டோரின் துயரம், பெண்களின் அனுபவங்கள், இளைஞர்களின் எதிர்காலக் கனவுகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்காக அவர்கள் பல சவால்களையும் எதிர்கொள்ளுகின்றனர். அதற்காகப் பல விலைகளையும் அவர்கள் கொடுக்கின்றனர்.

அவ்வகையில் எழுத்துக்களின் வழியாக அவர்கள் பெருக்கும் நம்பிக்கை என்பது ஈழ நிலத்தின் உயிர்வாசமாகும். உண்மையில் எழுத்து என்பது வெறும் வார்த்தைகளின் கூட்டுத்தொகையல்ல. அது ஒரு தலைமுறையின் சாட்சியம். கொல்லப்பட்ட எழுத்தாளர்களின் குரல், மௌனப்படுத்தப்பட்ட குரல்களின் எதிரொலி. காலத்தின் கண்ணாடி. ஒரு நிலத்தின் பண்பாட்டுரிமை. எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் துணிச்சல் ஒரு தேசத்தின் வேலி.

கற்பனைப் பாத்திரத்திற்கு விசாரணை

சர்வதேச எழுத்தாளர் தினத்தின் சூழலில் நினைவுகூரப்பட வேண்டிய இன்னொரு உண்மை என்னவெனில், இலங்கையில் கற்பனைக்கே சந்தேக நிழல் வீழ்ந்திருக்கிறது என்பதுதான். எழுத்தாளரும் கவிஞருமான இப் பத்தியின் ஆசிரியர், தனது ‘பயங்கரவாதி’ நாவலில் உருவாக்கிய கற்பனை கதாபாத்திரம் தொடர்பாக பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவால் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவம் இதற்குச் சாட்சியாகும். ஒரு இலக்கியக் கதாபாத்திரம் அரசியல் சந்தேகத்தின் பொருளாக மாறிய இந்த நிகழ்வு, கற்பனைக்கும் கண்காணிப்பு இருந்த காலத்தை வெளிப்படுத்துகிறது.

நாவலின் உள்ளடக்கம் ஒரு சமூக-அரசியல் யதார்த்தத்தை ஆராயும் படைப்பாக இருந்தபோதிலும், அது சட்ட மற்றும் பாதுகாப்பு அணுகுமுறையின் வழியாகப் பார்க்கப்பட்டது. இந்தச் சம்பவம், எழுத்தாளர்களின் சிந்தனை வெளிப்பாட்டை எவ்வாறு சந்தேகத்தின் வலையில் சிக்கவைக்க முடியும் என்பதையும், கலைச் சுதந்திரத்திற்கும் அரசியல் பாதுகாப்புக் கட்டமைப்பிற்கும் இடையிலான நுண்ணிய மோதலைவும் தெளிவுபடுத்துகிறது. கற்பனைக்கு விசாரணை நடக்கும் சூழல் உருவானால், அது தனிநபர் பிரச்சினையல்ல; ஒரு நாட்டின் ஜனநாயக மனநிலையைப் பற்றி எழும் பெரும் கேள்வியாகும். இது குறித்து யுனஸ்கோவிற்கும் சர்வதேச மன்னிப்புச் சபைக்கும் கடிதமும் எழுதப்பட்டது.

சர்வதேச எழுத்தாளர் தினம் என்பது வெறும் நாளின் கொண்டாட்டமாக கடந்து செல்வதற்கானது அல்ல. எழுத்தாளர்களை கௌரவிப்பது மட்டுமல்ல, அவர்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதே உண்மையான மரியாதை. கற்பனைக்கு சிறை இல்லாத உலகை உருவாக்குவது அரசுகளின் கடமையும், சமூகங்களின் பொறுப்பும் ஆகும். அச்சமின்றி எழுத முடியும் ஒரு நாளே ஒரு நாட்டின் உண்மையான சுதந்திர நாள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 05 March, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023