இலங்கைக் கடவுச்சீட்டினால் சிக்கல்: பிரித்தானியாவில் தடுப்புக் காவலில் முன்னாள் எம்.பி!
இலங்கையினால் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுகளில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் மற்றும் தரமற்ற தன்மை காரணமாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானியாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (07-08-2026) உயைாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டை இயந்திரங்களால் சரியாக வாசிக்க முடியாததால், அது போலியானது எனச் சந்தேகித்து பிரித்தானிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய கடவுச்சீட்டு
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “முன்னர் 64 பக்கங்களைக் கொண்டிருந்த கடவுச்சீட்டு தற்போது 48 பக்கங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
எனினும், அதற்காக வசூலிக்கப்படும் 6,000 ரூபாய் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

புதிய கடவுச்சீட்டுகளில் அவதானிப்புப் பக்கங்களோ (Observation pages) அல்லது கால நீடிப்புப் பக்கங்களோ சேர்க்கப்படவில்லை.
அத்துடன் அதன் அச்சின் தரம் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுகிறது.
நீதிமன்ற நடவடிக்கை
குறிப்பாகக் குடிவரவு முத்திரையிடும் போது மை மறுபக்கத்திற்கு ஊடுருவிப் பரவுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதால், சில நாடுகள் இந்த இலங்கைக் கடவுச்சீட்டுகளை நிராகரிகின்றன” என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கடவுச்சீட்டுகளின் தரத்தில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு சர்வதேச தரநிலைகளுக்கு அமையப் பக்கங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது உலகளவில் ஏனைய நாடுகளாலும் பின்பற்றப்படும் ஒரு நடைமுறையாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐந்து மில்லியன் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தப்புள்ளி (Tender) தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கை நிலுவையில் உள்ளதாகவும், புதிய ஈ-பாஸ்போர்ட் (E-Passport) முறையை அறிமுகப்படுத்தும் போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |