மார்ச் 20 இற்கு முன் தேர்தல் நடத்தப்பட வேண்டும் - இல்லையேல் சட்டச் சிக்கலாம்
இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தின் படி நடத்தப்பட வேண்டுமாக இருந்தால், எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தேர்தலை நடத்துவதற்கான நிதியை வழங்குவதை தடுக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நீதிமன்றத்தின் ஆணை
வரவு - செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்குமாறும், தேர்தல் நடத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் அதிபர் ரணில் விக்ரமசிங்க தேர்தல் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் திணைக்களம் தேர்தலை நடத்துவதாக கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றது. வேட்பாளர்கள் மத்தியில் தேர்தல் நடக்குமா இல்லையா என்ற சிந்தனையே உள்ளது.
இவ்வாறான நிலையில், சுமந்திரன் சட்டத்தை மேற்கோள்காட்டி இவ்வாறு கூறியுள்ளார்.
