அறிவிக்கப்பட்டது கூட்டணியின் சின்னம் - புதிய வியூகத்துடன் களமிறங்கத் தயார்!
இரண்டாம் இணைப்பு
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
இன்று மதியம் 12.20 மணியளவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்தக் கூட்டணி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எனும் பெயரில் குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
கூட்டணி ஒப்பந்தத்தில் புளொட் சார்பாக த.சித்தார்த்தனும்
ரெலோ சார்பாக செல்வம் அடைக்கலநாதனும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பாக சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசிய கட்சி சார்பாக என்.ஸ்ரீகாந்தாவும் ஜனநாயக போராளிகள் கட்சி சார்பாக வேந்தனும் கையெழுத்திட்டனர்.
முதலாம் இணைப்பு
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணியை ஆரம்பிப்பதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை யாழில் இயங்கும் பிரபல தனியார் விருந்தினர் விடுதியில் மேற்குறிப்பிட்ட கட்சிகள் ஒன்று கூடியுள்ளன.
எனினும் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வி.மணிவண்ணன் ஆகியோர் இன்றைய கலந்துரையாடலி்ல கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது வரை அவருடனான பேச்சுக்களும் தொடர்வதாகவே கூறப்படுகிறது.
விக்னேஸ்வரன் மணிவண்ணன் புறக்கணிப்பு
முதலில் இறைவணக்கத்துடன் கூட்டணியின் கலந்துரையாடல்கள் இடம்பெற்று, பின்னர் கூட்டணியாக தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில மணிநேரங்களில் இந்தப் புதிய கூட்டணிக்கான கட்சிகள் மற்றும் சின்னம் என்பன தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டணி வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்ததன் பின்னர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியேற்றம்
நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வி.மணிவண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இருப்பினும், சின்னம் தொடர்பில் ஏற்பட்ட இழுபறி காரணமாக விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் கூட்டத்திலிருந்து வெளியேறியிருந்தனர்.
தீர்மானம்
இவ்வாறான பின்னணியிலேயே ஏனைய கட்சிகள் உடன்பாட்டுக்கு வந்து கூட்டாக கூட்டணி அமைக்க முடிவு எடுத்தது. அதன் போதே, தமிழரசு கட்சி தனியாக போட்டியிட முடிவெடுத்த பின்னர் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளை இணைத்து குறித்த கூட்டணி உருவாக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






