உள்ளூராட்சி சபைத் தேர்தல் : யாழில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்
எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக குழுக்களுக்கு பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான முன்னேற்றக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (29.04.2025) பி.ப 05.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்களுக்கு குழுக்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கடமைகள் தொடர்பாகவும் அதன் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் தெரிவத்தாட்சி அலுவலரால் ஆராயப்பட்டது. பின்வரும் விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு மேலதிக அறிவுறுத்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலரால் வழங்கப்பட்டது.
இணைந்த வகையில் நடவடிக்கை
இதுவரை முறைப்பாடுப் பிரிவிற்கு கிடைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கான நடவடிக்கைகளை கேட்டறிந்ததுடன், காவல்துறை உத்தியோகத்தர்களின் மேலதிக ஆளணிகளையும் பெற்று இணைந்த வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள பணியாட்களின் விபரங்கள் தொடர்பாகவும், களஞ்சிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து உரிய அறிவுத்தல்கள் வழங்கப்பட்டது. போக்குவரத்து வசதிகள் தொடர்பாக ஆராய்ந்து, தேர்தல் கடமைக்காக தேவைப்படும் வாகனங்களை உரிய காலப்பகுதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமையவுள்ள மண்டப ஒழுங்குகள் தொடர்பாக ஆராயப்பட்டு, மேலதிக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
உத்தியோகத்தர்களுக்கான நலனோம்பல் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. பொது வசதிகள் குறிப்பாக குடிநீர், மலசல கூட வசதிகள் மற்றும் தங்குமிட வசதிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேலதிக கடமைகள் மற்றும் பொறுப்புக்கள்
தேர்தல் தொடர்பாக கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் ஒருங்கிணைப்பு செயற்பாடு தொடர்பாகவும் ஆராய்ந்து உரிய அறிவுத்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலரால் வழங்கப்பட்டது.
மேலும், இக் கலந்துரையாடலில் மேலதிக கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக பிரதித் தேர்தல் ஆணையாளர் இ. சசீலன் அறிவுரைகள் வழங்கினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
